பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

23

சிகிச்சை : தடித்து வீங்கிக் காணப்படும் மார்பின் மீது சூடான ஒத்தடம் கொடுக்கவேண்டும். கால்சியம் குளுக்கோனேட்டுப் பொடி ஒன்று அல்லது இரண்டு கிரெயின் அளவில், ஒரு நாளைக்கு மூன்று வேளை, தேனில் குழைத்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

சீரணக் கருவிகளைப் பாதிக்கும் நோய் : வாய்ப்புண்: வாயின் உட்புறத்தே அமைந்துள்ள மெல்லிய தோல், தனக்கு இயற்கையாக உள்ள நோயைத் தடுக்கும் சக்தி குறைந்து, நலிவடையும் பொழுது பல்வேறு நச்சுக் கிருமிகள் அதைத் தாக்கி, வாயின் உட்புறத்திலும், உதடுகளின் ஓரத்திலும் சிறு குழிப்புண்களை உண்டாக்குகின்றன. வாயில் புண் உண்டாகக் காரணம் : 1. குழந்தைக்கு அளிக்கப்படும் உணவில் ‘சி’ வைட்டமின் குறைவாக இருத்தல். 2. பல் முளைக்கும் பருவத்தில், வயிறு வீங்கிக் கனமாகி, பலவீனமாகி விடுதல். 3. பொதுவாகப் பலவித நோயினால் குழந்தையின் உடல் நலம் பழுதுபட்டிருத்தல். 4. குடலும், இரைப்பையும் அசீரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்தல். 5. டைபாய்டு, தட்டம்மை போன்ற நோயின் போது வாயைச் சுத்தமாக வைத்திருக்கத் தவறுதல். வாய்ப் புண்ணில் மிகவும் முக்கியமானவை இரண்டு : 1. திரஷ் வாய்க்கிரந்தி (Thrush), 2. நோமா (Noma) திரஷ், பால் குடிக்கும் பருவத்திலும், இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அதிக நாட்கள் காய்ச்சலாக படுத்திருந்தாலும், அல்லது உடல் நலம் குன்றி நலிந்திருந்தாலும் வரும்.

நோய்க் குறி : வாயின் உட்புறத்தில் நாக்கின் மீதும், மற்றைய பாகத்திலும் திரிந்து போன பால் சிறு கட்டிகளாகச் சிதறிக் கிடப்பது போன்று முத்தைப் போன்ற வெண்ணிறத்தில் பரவிக்கிடக்கும், எளிதில் துடைத்து அப்புறப்படுத்த இயலாது. அழுத்தி விரலால் துடைத்து அப்புறப்படுத்தினால் சிறிய வட்டமாக சிவந்த புண்களைக் காணலாம். இந்நோயினால் நாக்கில் வீக்கமோ, வலியோ காணப்படுவதில்லை.