பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பாப்பா முதல் பாட்டி வரை

சிகிச்சை : தட்டம்மை, டைபாய்டு போன்ற நோய்களில் குழந்தை அவதிப்படும் பொழுது, குழந்தையின் வாயை நாள்தோறும் மருந்து நீரால் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நலிவுற்ற குழந்கைளுக்கு, ஊட்டமான உணவு தரவேண்டும். பால் கொடுக்கு முன் தாயார் மார்புக் காம்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும். செயற்கை உணவு கொடுப்பதானால் பால் புட்டி, சுவைக்கும் ரப்பர் இவைகளை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தியபின் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். வாயில் ஏற்பட்டிருக்கும் புண்ணைக் சுத்தமான பஞ்சினால் மெல்லத் துடைத்துவிட்டு, நாள்தோறும், இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு போரிக் அமிலத்துாள் ஒரு படி வெந்நீரில் கரைத்து, அந் நீரால் குழந்தையின் வாயைச் சுத்தப்படுத்துவிட்டு, நீரில் கரைத்த ஜென்ஷியன் வயலெட் (Gentian violet) என்னும் மருந்தைப் புண்ணின் மீது தடவ வேண்டும். கிளிசரின் எனும் திரவத்துடன் வெண்காரத்துகளைக் (Borax) கலந்து, புண்மீது பூசுவதும் ஒருவித சிகிச்சையாகும்.

நோமா : (Noma) இது வாய்ப்புண்ணில் மிகவும் அபாயகரமான நோய், டைபாய்டு, தட்டம்மை போன்ற நோய்களின் பொழுது, குழந்தையின் வாய் அசுத்தமாகக் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டால் நச்சுக் கிருமிகள் அங்கு சென்று, குடியேறி, விருத்தியடைந்து, வாயில் புண்ணை உண்டாக்குகின்றன. நலிவடைந்திருக்கும் உட்புறத் தோலைப் பாதித்து விரைவாகப் பரவும் இப்புண் சில சமயம் கன்னங்களில் துவாரம் உண்டாக்கி விடுவதும் உண்டு.

நோய்க்குறி : வயிற்றின் மீதும், கன்னங்களின் ஓரத்திலும் முதலில் சிறு குழிப்புண்ணாகத் தொடங்கிச் சில நாட்களில் பெரிதாகிக், கரும்பச்சை நிறமான புண்ணாகக் காணப்படும்: துர்நாற்றம் வீசும். இதைக் கவனித்துச் சிகிச்சை செய்யாவிடில் மரணம் உண்டாகும்.