பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

33

அளவு சேடியம் சிட்ரேட்டு உப்பைத் தண்ணீரில் கரைத்துப் புகட்டி விடுவது நலம். மலக்சிக்கல் இல்லாமல் குழந்தையைக் கவனித்துக் கொள்வது, சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இவ்வளவு கவனித்தும் தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டால், தாய்ப் பாலை நிறுத்திவிட்டு, வேறு உணவைக் கொடுப்பது நலம்.

செயற்கை உணவு தந்தால் உணவை மிகவும் சுத்தமாகத் தயாரிக்க வேண்டும். சோடா பைக் கார்பனேட்டு உப்பு 2% கிரெயின், அரொமாட்டிக் ஸ்பிரிட் ஆப் அம்மோனிய 2% சொட்டு, கிளிசரின் 2% சொட்டு, இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு பெப்பர்மின்டு நீர் கலந்து, உணவு தரும் வேளைகளுக்கிடையே சில நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைக்கு வரும் வயிற்று வலியை ஒருவாறு தடுக்க இயலும். ஒரு குறிப்பிட்ட செயற்கை உணவு ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுவலி ஏற்பட்டால், அதை மாற்றி வேறு வகை உணவைத் தரவேண்டும்.

மலச்சிக்கல் குழந்தைகளுக்கு வரும் சாதாரண நோய்களில் ஒன்று. இதைப்பற்றி வேறிடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

விக்கல் : குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், உணவிற்குப் பிறகு விக்கல் வருவது இயற்கை. இதனால் அபாயம் இல்லை. ஆனால், அவசரமாகப் பாலைப் பருகும் பொழுது இதனுடன் காற்றையும் விழுங்கி விடுவதினால் அபாயம் ஏற்படுகின்றது. அதனால் அவசரப்படாமல், நிதானித்து அளிக்க வேண்டும். பால் குடித்ததும், குழந்தையைத் தோளின் மீது சார்த்திக் கொண்டு, மெல்ல முதுகில் நாலைந்து முறை தட்டிக்கொடுத்தால், விழுங்கியுள்ள காற்று வெளியேறிவிடும். கொஞ்சம் வெது வெதுப்பான வெந்நீர், குடிப்பதற்கு அளித்தால், சில சமயம் விக்கல் நின்று போவதுண்டு.