பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பாப்பா முதல் பாட்டி வரை

சீரணக் கருவிகளைப் பற்றிய பிற நோய்கள் : 1. பிறவிலேயே குடல் வாய் குறுகியிருத்தல். 2. குடல் தடை, குடல் வால் அழற்சி. 3. ஈரல் குலைக்கட்டி, 4. கல்லீரல், மண்ணீரல் வீக்கம். 5. குடல் இறக்கம். 6. மஞ்சள் காமாலை முதலியன. இவற்றைப்பற்றி வேறு இடத்தில் விவரம் உள்ளது.

இளைத்தல் : குழந்தை இளைத்துப் போவதின் காரணங்கள் பின்வருவன : 1. ஊட்டக்குறை (a) குழந்தைக்கு அளிக்கப்படும் உணவு வளர்ச்சிக்கு வேண்டிய அளவில்லாமல் குறைவாக இருப்பது (b) உணவை வேண்டிய அளவு உட்கொள்ள முடியாமல், மூளி உதடு, மூளி மேல்வாய் போன்ற பிறவிக் கோளாறுகள் இருப்பது. (c) தேவையான சத்துப்பொருள்கள் குறைந்த, செயற்கை உணவை அளிப்பது. 2. குழந்தை குறை மாதத்தில் பிறப்பது. இதற்குச் சீரண சக்தி குறைவு. தேவையான பாலைக் குடிக்க உடலில் சக்தி இருப்பதில்லை. உணவில் பெரும்பகுதி உடலின் வெப்ப நிலையைக் காக்கச் செலவழிந்து போவதினால் வளர்ச்சிக்குத் தேவையான அளவு உணவு கிடைப்பதில்லை. 3. குழந்தைக்கு அடிக்கடி வரும் பேதி நோய், 4. அசீரணம். 5. பிறவியிலேயே ஏற்படும் மேக நோய். 6. க்ஷயம். 7. எவ்விதக் காரணமுன்றி இளைத்துப் போகும் ஒரு தனிப்பட்ட நோய் . (Idiopathic wasting)

சிகிச்சை : இளைக்கும் காரணத்தைக் கண்டுபிடித்துத் தடுப்பதுதான் தகுந்த சிகிச்சை. ஊட்டமான உணவு, காற்றோட்டம், சூரிய வெளிச்சம் முதலியன இளைத்ததைத் தடுக்கும். இளைத்திருக்கும் குழந்தையைக் குளிப்பாட்டியதும், ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நோயுற்று நலிந்துள்ள குழந்தைகளை மடியிலேயே வைத்துக் குழந்தைக்குச் சாந்தியை ஊட்டுவது மிகவும் முக்கியமானது. இத்தகைய குழந்தைகளுக்குத் தாயின் கவனிப்பு மிகவும் அதிகம் தேவை.