பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பாப்பா முதல் பாட்டி வரை

எடுத்துப்போதல் கூடாது. சளி பிடித்திருப்பவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சி விளையாடி முத்தமிடுதல் ஆகாது.

குளிர்காலத்தில் கம்பளிச் சட்டைகளைப் போட்டு அதிகக் குளிர் காற்று மேலே வீசாது தடுத்தல் வேண்டும். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த உணவு, தேவையான ஓய்வு, சூரிய வெளிச்சம், நல்ல காற்று, இவைகள் சளி வராமல் பாதுகாக்கும் மருந்துகள். நோய் வாய்ப்பட்டிருக்கும் குழந்தையை, ஓய்வாகப் படுக்கையில் கிடத்தி வைப்பது நலம். ஒரு வயதிற்கு ஒரு கிரெயின் அளவு என்ற கணக்கில் ஒரு தடவைக்குச் சுமார் ஐந்து கிரெயினுக்கு மேற்படாத ஆஸ்பரின் (த.க) மருந்து உள்ளுக்குக் கொடுப்பது ஒருவித சிகிக்சையாகும். ஆனாலும், ஆஸ்பரின் மருந்தை நினைத்த மாத்திரம், தாறு மாறாகப் பயன்படுத்துவது தவறு. தூங்குவதற்குள் கோடீன் அல்லது பார்பிட்ரேட்டு ஏதேனும் கொடுக்கலாம். குழந்தைக்கு எனிமா கொடுத்துக் குடலைச் சுத்தப்படுத்துவது நலம். சளி சுவாசக் குழலுக்குள் போய் விடாதிருக்கப் படுக்கையில் கால்களை உயர்த்தி, தலையைத் தாழ்த்தி வைக்க வேண்டும்; குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்துத் தூங்கச் செய்வது நல்ல முறையாகும். சளி நீரை மெல்லிய பஞ்சுத் துணியினால் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்குப் பார்லித் தண்ணீரும், குளுக்கோசு சர்க்கரையும் கலந்த எளிய உணவு போதும். அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்குக் கெட்டியான உணவை நீக்கிவிட்டுப் பால், பழச்சாறு முதலிய நீர்த்த உணவு அளிப்பது தான் நல்லது. சளி நோய்க்கு இக்கால வைத்தியர்கள், சல்பானமைடு, பெனிசிலின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இம் மருந்துகள் சளியைப் போக்கும் மருந்துகள் என நிச்சயமாகக் கூற முடியாது.