பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

55

சிகிச்சை : புண், பூச்சித் தொந்தரவு இவைகளைக் கவனித்து, உடனுக்குடன் சிகிச்சை செய்தல் வேண்டும். சிறு பருவத்தில், அதாவது ஒரு வயதிலிருந்து குழந்தையை இரவில் ஒரு முறை நடுவில் எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்து, பயிற்சி அளித்தல் வேண்டும். இரவில் எழுப்பும் நேரத்தையும், கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போட்டுக் கொண்டுவந்தால், முடிவில் இரவு முழுவதும் எழுப்பாவிடினும், குழந்தை சிறுநீரைப் படுக்கையில் கழியாமல், விடிந்து எழுந்த பின்பு, தானே வெளியே சென்று கழிக்கத் துவங்கும். பயம், கோபம் முதலிய உணாச்சிகளின் காரணமாக ஏற்பட்டதாக இருந்தால், தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை. மகிழ்ச்சியான மனநிலை, தாயின் ஆறுதல் மொழிகள், முதலியவையே குழந்தையிடம் காணப்படும் இப் பழக்கத்தை நீக்கிவிடும்.

அங்க சேஷ்டைகள் : முகத்தைச் சுருக்குதல், கண்களை இமைத்தல், மூக்கை உறிஞ்சுதல், கைகால்களை இப்படியும், அப்படியும் அசைத்தல் போன்ற காரணமற்ற, அர்த்தமற்ற செயல்கள், குழந்தைகளிடம் காணப்படுவது உண்டு. இதுவும் நரம்பு பற்றிய ஒரு கோளாறுதான்.

காரணம் : முடக்குவாத நோயினால் பீடிக்கப்பட்டு மெலிந்துபோதல், இரத்த சோகை, பள்ளிக்கூடத்தில் அதிக வேலை, பொதுவாக, நலக்குறைவு முதலியன ஆகும். இதைத் தவிர, சொத்தைப் பல், தொண்டையில் இரணம், கண்களில் பார்வைக் கோளாறு முதலியவைகளும் காரணமாகின்றன.

சிகிச்சை : ஓய்வு, நல்ல உணவு, இவற்றுடன் தொண்டை ரணம், கண் பார்வைக் கோளாறு இவைகளுக்குத் தனிப்பட்ட சிகிச்சை செய்தால், இந்தக் கோளாறு நீங்கும். இந்த மாதிரி அங்க சேஷ்டைகளை நிறுத்த முயல வேண்டுமென்று தாயார் மெல்லக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவதும் நலமாகும்.