பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பாப்பா முதல் பாட்டி வரை

வாழ்க்கை அனுபவங்களே கல்வியாகும் என்பது குழந்தைப் பள்ளிகளின் அடிப்படைக் கொள்கை. பாடம் சொல்லிக் கொடுப்பது என்பதற்கு இங்கு இடம் கிடையாது. ஆராய்தல், கவனித்தல், சோதனை செய்தல், பார்த்துச் செய்தல், முதலியவற்றிற்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டால், அவற்றால் உண்டாகும் அனுபவங்களே குழந்கைளுக்குக் கல்வியாகி விடுகின்றன. அதுவே குழந்தைகள் கல்வி பெறுவதற்கான இயற்கை முறையாகும்.

வரலாறு : இங்கிலாந்து நாட்டில் நியூலானர்க் என்னுமிடத்தில் ராபர்ட் ஒயின் என்பவர், 1816-இல் முதன் முதலாகச் சிசுப் பள்ளி (Infant school) என்பதை நிறுவினார்.இத்தகைய பள்ளி அவசியம் என்னும் கருத்துச் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. 1907-இல் அரசாங்கக் கல்வி இலாகா நியமித்த கமிட்டியார், இத்தகைய பள்ளியைக் குழந்தைகள் பள்ளி (Nursery School) என்று அழைக்கலாயினர்.

1944-இல் ஆங்கில அரசாங்கக் கல்விச் சட்டமானது, இத்தகைய பள்ளிகள் நிறுவிக் கல்வியளிப்பது அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகச் செய்தது. 1946-இல் 2-5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான பள்ளிகள் 97-ம் பிற பள்ளிகளில், இக் குழந்தைகளுக்கான வகுப்புக்கள் 1828-ம் இருந்தன.

ஜெர்மெனியில் புரோபெல் என்பவர், கிண்டர் கார்ட்டன் (Kinder garden) என்ற பெயரில் ஒருவகைக் குழந்தைப் பள்ளியை, 1837-இல் அமைத்தார். இத்தாலியில் மான்டிசோரி அம்மையார் ஒருவகைக் குழந்தைப் பள்ளியை 1907-ல் அமைத்தார். ஆங்கில முறை மான்டிசோரி முறையை (த. க.) விட, கிண்டர் கார்ட்டன் முறையே அதிகமாகத் தழுவியுள்ளது.