பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63

ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலுள்ள குழந்தைப் பாடல்களைத் தொகுத்து, நூல் வடிவிலே வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றிற்கு மிக அழகான வண்ணப் படங்களும் தீட்டியிருக்கிறார்கள். நீண்ட காலமாக வந்துள்ள பாடல்களைப் பின்பற்றிப் பல கவிஞர்களும், புதிய குழந்தைப் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள பழைய குழந்தைப் பாடல்களைத் தொகுத்துச் சிறந்த முறையில் இன்னும் வெளியிடவில்லை. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (த.க.) முதலிய கவிஞர்கள் புதிய குழந்தைப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை தாயின் கருப்பையிலிருந்து, வெளியே, புதியதோர் இடத்துக்கு வருகின்றது. அது இதுவரை, இருளும், வெப்பமும் உள்ள இடத்தில் வாழ்ந்து வந்தது. அதனால் குழந்தை பிறந்ததும், அழ ஆரம்பிக்கிறது. அதை நன்றாகப் போர்த்தி இருட்டான அறையில் படுக்க வைக்க வேண்டும்.

குழந்தை பிறந்து, இரண்டு மூன்று மணிநேரம் சென்றதும், அதைக் குளிப்பாட்டுவார்கள். அதன்பின் அதை 24 மணிப்பொழுது, கால் பக்கத்தை விடத் தலைப்பக்கம் 3-4 அங்குலம் தாழ்ந்ததாகப் படுக்க வைப்பார்கள். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும்போது ஏதேனும் நீரோ, சளியோ குரல் வளையினுள் சேர்ந்திருந்தால் வெளியே வந்துவிடும்.

குழந்தையை நாள்தோறும் குளிப்பாட்ட வேண்டும். குளிர்ந்த காற்றுப் படாமல் காக்கவேண்டும். குழந்தை இருக்குமிடம் எப்போதும், நல்ல காற்று உலவுவதாக இருக்க வேண்டும். குழந்தையைக் கொசுக்கள் கடிக்கா வண்ணம் கவனித்துக்கட்கொள்ள வேண்டும். குழந்தை உறங்கும்போது, கொசுவலை போடுவது நல்லது.