பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பாப்பா முதல் பாட்டி வரை

நாமறியாமலே வாய்வழியாக வெளியேறி விடும். குழந்தையிடம் இவ்விதம் நடைபெறாது. குழந்தையின் வயிற்றிலுள்ள வாயுவுடன், சீரணமாகி கொண்டிருக்கும் பாலும் வாயினால் வெளியாகும். அதனால் குழந்தை எடை பெருகாது தடைபடும். குழந்தை இடைவிடாமல் பசித்து அழும். வெளிவந்த பால் வழிந்து, குழந்தையின் உடை அசுத்தமாக ஆகிடும். இவ்வாறு நேராமல் இருப்பதற்காகத் தாய் குழந்தைக்குப் பால் தரும் போது, குழந்தை பாதியளவு பால் குடித்ததும், குழந்தையைத் தூக்கித் தோளில் சார்த்தி வைத்துக் கொண்டு வாயு வெளியேறும் ஒலி கேட்கும் வரை மெதுவாக அதன் முதுகில் தட்டவேண்டும்.

குழந்தைக்குப் பால் தரும்முன் தாய் தன்னுடைய கைகளைக் கழுவவேண்டும். கொதித்து ஆறிய நீரில் தோய்த்த பஞ்சு கொண்டு, தனக்காம்புகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும். பால் கொடுத்த பின்பும் இவ்வாறு துடைத்துப் பின், காம்பு உலர்ந்ததும் அதன் மீது வெண் வாசிலின் தடவ வேண்டும்.

குழந்தைக்குப் பால் தரும்போது குழந்தையை அதிக விரைவாகக் குடிக்க இடந்தரலாகாது. குடிக்கும் போது உறங்கிவிடவும் இடந்தரலாகாது.

குழந்தை போதுமான ஊட்டம் பெற்று வருகிறதா என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக வாரந்தோறும் குழந்தையை நிறுக்க வேண்டும். முதல் வாரத்தில் எடை குறையும் என்று கண்டோம். இரண்டாம் வாரத்தில்ருந்து ஒரு வாரத்துக்கு 4 அவுன்ஸ் வீதம் ஒழுங்காக எடை கூடிக்கொண்டு வரவேண்டும். எடை ஒழுங்காகக் கூடிவராதிருந்தால், குழந்தையின் உடல் நலமாயில்லை என்று தெரிந்துகொள்ள வேண்டும்.