பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தைக்குப் பிறந்தது முதல் மீன் எண்ணெய் தருதல் நல்லது. இதிலுள்ள ‘ஏ’ வைட்டமின் பாதுகாப்பளிக்கும். டீ வைட்டமின் கணைநோய் வராமல் தடுக்கும். குழந்தையின் உடம்பில், இளம் வெயில் சிறிது நேரம் படும்படி செய்தாலும், குழந்தைக்கு டீ வைட்டமின் கிடைக்கும்.

புட்டிப்பால் தரும் குழந்தைகட்குப் பாலை மெதுவாக 3-5 நிமிஷம் கொதிக்க வைக்க வேண்டும். நோய்க் கிருமிகள் பாலில் மிக விரைவில் பரவுவதால், பாலை எப்பொழுதும் குளிர்ந்ததாகவே வைத்திருக்க வேண்டும். பால் உள்ள பாத்திரத்தைப் பனிக்கட்டிப் பாத்திரத்தில் வைத்திருப்பது நல்லது. ஆறு திங்களுக்குப் பின் குழந்தைக்கு உணவு கீழ்க்கண்டவாறு தரவேண்டும்.

குழந்தைக்குச் சிறிது சிறிதாகப் புதிய உண்டிகள் தந்து பழக்குவது நல்லது. உணவு தருவதில் எந்த மாற்றத்தையும் திடீரென்று செய்தலாகாது. ஒரு மாதம் வரை குழந்தையின் இரைப்பை, பாலை மட்டுமே சொறிக்கக் கூடியது. அதுவரை உமிழ்நீர் சுரப்பதில்லை. அதனால் சோறு போன்ற ஸ்டார்ச்சைக் குழந்தை செரிக்க முடியாது. ஸ்டார்ச்சு செரிப்பதற்கு உமிழ்நீர் இன்றியமையாத தேவையாகும்.

ஆறு மாதமாகும் போது, குழந்தைக்குப் பல் முளைக்கத் தொடங்கும். குழந்தை அதிகமாக வேலை செய்யும். அதனால் அதன் செரிப்பு ஆற்றல் பெருகும்.

பன்னிரண்டு மாதமாகும் போது, அவ் வயதுக்கு ஏற்ற கட்டியான உணவுகளை உண்ணத்தர வேண்டும். ஒரு நாளைக்கு 3-4 தடவைகளே தரலாம். நாள்தோறும் குழந்தை, ஒரு பைன்டுப் பசும்பால் பருகவேண்டும். உணவு வேளைகளுக்கு இடையே நீர் பருகவேண்டுமேயன்றி வேறு எதுவும் உண்ணலாகாது.