பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

75

புதிதாக எந்த உணவைக் கொடுத்கத் தொடங்கினாலும், அதைச் சிறிய அளவிலேயே தரவேண்டும். குழந்தை அதை விரும்பாவிட்டாலும், அல்லது அது குழந்தையின் உடலுக்கு ஒத்து வராவிட்டாலும் அதைத் தரலாகாது.

நன்றாக மென்று விழுங்கக்கூடிய உணவுகளைத் தருவதே நல்லது. மிருதுவான உணவுகள் தருவதைக் குறைக்க வேண்டும். மென்று விழுங்குவது, சீரணத்துக்கும், நல்ல பல் உண்டாவதற்கும் நல்லது. இரண்டு வயதாகும் வரை, இறைச்சி தரலாகாது. அதற்கு முன் இறைச்சியை சீரணிப்பது கடினம். இது போல், முற்றிலும் விலக்க வேண்டிய உணவுகள் தேநீர், காப்பி, எண்ணெய் அல்லது நெய்யில் வெந்தவை, தித்திப்புப் பலகாரங்கள், மசாலாப் பொருள்கள் என்பன. தித்திப்புக் பண்டங்கள் சீரணத்துக்கும், பல் வளர்ச்சிக்கும் ஊறு செய்வன.

குழந்தை உணவு உண்ணும்போது, போதும் என்று கூறியதும் நிறுத்தி விட வேண்டும், உண்ணுமாறு வற்புறுத்தலாகாது. வற்புறுத்தினால் சீரணம் கெடும், நோய் வரும், குழந்தையின் உயரமும் எடையும் ஒழுங்காகக் கூடிவருமாயின், குழந்தையுண்ணும் உணவின் அளவைப் பற்றித் தாய் கவலை கொள்ளலாகாது.

கழிவுமுறைப் பயிற்சி : குழந்தைக்குக் குறிப்பிட்ட வேளையில் ஒழுங்கான உணவு கொடுப்பது எத்துணை அவசியமோ, அத்துணை குழந்தைக்கு மலமும், மூத்திரமும் ஒழுங்காகக் கழிக்குமாறு பயிற்று வித்தலும் அவசியமாகும்.

குழந்தை பிறந்து சில நாட்கள் ஆயினும், அரைத் துணியைக் குறித்த வேளைகளில் அவிழ்த்துவிட்டு, அதைக் கால்களுக்கிடையில் பிடித்தால் அது மலங்கழிக்கும் பழக்கத்தைப் பெற்றுவிடும். அவ்விதம் செய்துவந்தால், சில மாத காலத்தில் துணியில் மலம் கழியாதிருந்து விடும்.