பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

77

குழந்தை அழாமலிருக்கும் பொருட்டுத் தாய்மார்கள் அதன் வாயில் சூப்பான் கொடுக்கிறார்கள். குழந்தை தானாகத் தன் பெருவிரலை வைத்துச் சூப்புவதுண்டு. ஆனால், சூப்பானைக் கொடுப்பதும் குழந்தை விரலைச் சூப்புவதும் தவறு. குழந்தை அதன் இன்பத்தில் ஆழ்ந்து விட்டால், வெளியே கவனித்து அறிவு பெறும் வளர்ச்சி தடைப்பட்டுவிடும். அதனால் சூப்பான் கொடுத்தலாகாது. விரலைச் சூப்பவும் விடலாகாது. விரலைச் சூப்புவதை நிறுத்த வேண்டுமாயின், அதை தொடக்கத்திலேயே தடுத்துவிட வேண்டும். பொதுவாக முதல் மூன்று மாத காலத்தில், குழந்தை வாயில் விரலை விடாது. அந்தக் காலத்தில் அதன் உடையோ அல்லது போர்த்தியுள்ள துணியோ வாயில் அகப்பட்டால், சூப்பத் தொடங்கிவிடும். இவ்வாறு இவ் வழக்கம் உண்டாகாதபடி அதன் துணி எதுவும் வாயில் அகப்படாதபடி, செய்யவேண்டும். குழந்தை விரலை வாயிலிடும்போது முதலிருந்தே தடுக்கவேண்டும். அதற்காகக் குழந்தை விரலை வாயில் வைத்ததும், விரலின் மீது சுண்டினால், அதை எடுத்துவிடும். இவ்வாறு குழந்தை விரலை வாயில் வைக்கும் பொழுதெல்லாம் செய்து வந்தால், அப்பழக்கம் உண்டாகாது.

தாய் குழந்தையின் பக்கத்தில் இருந்துகொண்டு சுண்ட முடியாதிருப்பின் குழந்தை வாயிலிடும் விரலில் ஏதேனும் தூய துணியைச் சுற்றி வைக்கவேண்டும். அப்படிச் செய்தாலும், தாய் பக்கத்திலிருக்கக்கூடிய வேளையில்துணி கட்டாமல் சுண்டியே வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குழந்தையினிடம் தவறான பழக்கம் உண்டாகாமல் நின்றுவிடும். குழந்தையும் தன்னை அடக்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தையும் பெற்றுவிடும்.