பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதம்

ருத்துவத்துறையில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது, ஸ்கேன் (scan) ‘ஸ்கேன்’ இல்லையெனில், இன்றைய மருத்துவத் துறையே ஸ்தம்பித்துவிடும். எளியோர் முதல் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர் வரை, அனைவருக்கும் ஸ்கேன் என்ற சொல் பரிச்சயமாகிவிட்டது.

நோய், அதன் வீரியம் ஆகியவற்றை மருத்துவர் தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க, ஸ்கேன் கருவி உதவியாக உள்ளது. குறிப்பாக பிள்ளைப் பேற்றில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனரின் (Ultra sound scaner) பங்கு அளவிட முடியாதது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதனால் ‘பிள்ளைப் பெறும் பெண்களுக்கு மறுபிறவி’ என்பதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இக் கருவி மூலம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை முன் கூட்டியயே அறிந்து, அவற்றுக்குத் தீர்வு சொல்வதால், பிரசவத்தில் உயிர் இழப்பு 99 சதவீதம் குறைந்துவிட்டது.

காதில் கேட்க முடியாத ஒலி அலைகளை (Ultra Sound) உடலில் செலுத்தி, அதைக்கொண்டு உள்உறுப்புகளின் நிலையைத் தெரிந்து கொள்வது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். 50 ஆண்டுகளாகப் பரிசோதனையில் இருந்த ஸ்கேன், கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளாக முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.