பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

பாப்பா முதல் பாட்டி வரை

சிசேரியன் அதிகரித்திருப்பதாக நினைப்பது மாயத் தோற்றம்: 1960-களில் 100 பேர் பிரசவத்துக்கு வந்தால், அவற்றில் 20 பேர், முதல் பிரசவத்துக்கு (தலைச்சன்) வந்தனர்; 80 பேர் இரண்டு அல்லது மூன்றாவது அல்லது நான்காவது குழந்தையைப் பெற்றெடுக்க வந்தனர். அப்போது, முதல் பிரசவத்துக்கு வந்த 20 பேரில் 2 பேருக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆக அப்போது மொத்த சிசேரியன் விகிதம் 4 சதவிகிதம்

தற்போது சிறு குடும்பக் கட்டாயச் சூழ்நிலை காரணமாக, 100க்கு 60 பேர் முதல் பிரசவத்துக்கு (தலைச்சன்) வருகின்றனர்; இவர்களில் ஆறு பேருக்குச் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது. மீதமுள்ள 40 பேர் தான் இரண்டு அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது. ஆக மொத்த சிசேரியன் விகிதம் 7 சதவீதம். ஆக 40 ஆண்டுக்காலம் சிசேரியன் விகிதம், கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் உள்ளது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, மருத்தவ ரீதியாக ஒரு பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பது கடினமான ஒன்று; தற்போது தலைப் பிரசவம் அதிகரித்துள்ளதால், சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரித்தது போல் தோன்றுகிறது.

இரட்டைக் குழந்தைகள் : கருவில் இரட்டைக் குழந்தைகள் வளரும் நிலையிலும், சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் முதல் குழந்தை இயல்பாக வெளியேறிய பிறகு, இரண்டாவது குழந்தை கர்ப்பப் பையில் குறுக்கும் நெடுக்குமாக இருந்தால், சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.