பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 117


அமைகிறது. எனினும் மண் ஜாடியாகவும் மண் தட்டுகள் முதலிய எண்ணிறந்த பிற பொருள்களாகவும் விளங்குவதால், ஜாடி என மட்டும் கூறுவது காரணமான மண்ணை விளக்குவது ஆகாது. எனினும், காரணம் காரியத்தோடு, ஒன்றியே உளது. காரணம், காரியமாகிய காரியத்துள் நிறைந்துளது. களிமண், மண் ஜாடியினின்று வேறாகாது. இரண்டுமே, களிமண்ணாகும். ஆதலால், காரண, காரிய அல்லது முழுமைப் பகுதி உறவு, வேற்றுமையுள் ஒற்றுமையையே வற்புறுத்தும் உறவாகும்.

   இதேபோல, பிரபஞ்சத்துள் காணப்பெறும் ஆன்மாக்களும் பொருள்களும் பிரமத்தின் வேறாகும். பிரமத்தின் குணங்களாக ஆன்மாக்களும், பொருள்களும் அமைகின்றன. தூய்மை இன்மை பருமை, எல்லைக்குட்பட்ட தன்மை போன்ற பிற குணங்கள் ஆன்மாக்கள் இடத்தும்,பொருள்கள் இடத்தும் அமைகின்றன. ஆதலால் பிரமத்தின் வேறாக ஆன்மாக்களும் பொருள்களும் அமைகின்றன. செயல்நிலைகள் தன்னலம் கருதியனவாக அமையப்பார்க்கிறோம். இச்செயல் நிலைகள், பிரமத்திடத்துக் காணுகின்ற படைப்புப் போன்ற செயல் நிலைகட்கு மாறானவையாகும்.துாய்மை, எங்கும் நிறைதல் ஆகிய குணங்கள், தூய்மை இன்மை, எல்லைக்குட்படுதல் ஆகியவற்றின் வேறாகும்.
   பிரபஞ்சம், பிரமத்தின் வேறு என்பதைப பிரபஞ்சமும், ஆன்மாக்களும் பிரமத்தின் மாறுநிலைகள் என்று அறிவதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். பிரபஞ்சமும், ஆன்மாக்களும் பிரமத்தின் மாறு நிலைகள் என்றாலும், உண்மையில் பிரமமேயாகும். பிரமத்தின் எண்ணிறந்த ஆற்றல்களின் மூலக்கூறுகளுள், பிரபஞ்சம் ஒன்றாக விளங்குகின்றது. ஆதலால், பிரபஞ்சம், பிரமத்தின் வேராகும். பிரமம் முழுமையும் ஒரு பிரபஞ்சத்தின் வாயிலாக வெளிப்படாது. பிரமம் பிரபஞ்சத்திடத்தில் நிறைந்து விளங்குதலால், பிரபஞ்சத்தோடு ஒன்றாகிப் பிரபஞ்சத்தின் காரணமாகிறது.