பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 த. கோவேந்தன் குறைவற விளங்க விளங்குவதற்குக் காரணமாக இருப்பவர் ஹரியாகும். ஆன்மீக உலகிலே, உள்பொருளாக விளங்குவது எல்லையிறந்ததாகும். உள்பொருள் நிறைவோடும் எல்லையற்ற தன்மையோடும், யாவற்றையும் உட்படுத்துகின்ற முழுமையாக விளங்குகிறவர் ஹரி. இவ்வாறு விளங்கும் முழுமையின் கூறும், முழுமையின் இயல்புகளைப் பெற்று விளங்குதலில் வியப்பு இல்லை. பூரணத்தினின்று பூரணத்தைக் கழித்தால் பூரணமே மிஞ்சும் குறைவின்றி நிறைவோடு பூரணமாக விளங்கும். இறைவனாகிய ஹரி, உளதாம் தன்மை, வரம்பில் இன்பம், முற்றுணர்வு ஆகிய இயல்புகளைச் சிறப்பாகப் பெற்றிருக்கின்ற நிலையில் எவ்வாறு எல்லைக்குட் படுகின்ற நிலையாகிய கிருஷ்ண வடிவத்தை ஏற்க இயலும்? ஒரு வடிவம் ஏற்கும்போது, எங்கும் பரவியிருத்தல் அல்லது முடிவற்ற தன்மை என்கின்ற இயல்புகளை இது இழப்பதாகும்.இதனோடு உறுதியிலும், திறமையிலும் எல்லைக்குட்படுதலும் நேர்கின்றது. இவ்வாறு எழுப்பப் பெறுகின்ற தடைகட்கு அளிக்கப்பெறும் விடையாவது: ஆன்மீக இயல்புகள் இல்லாத பொருள்கட்கு ஆன்மீக இயல்புகளை உரித்தாக்குதலால் விளைகின்ற தவறுகளே தடைகட்குக் காரணம் ஆகும். பருப்பொருள்கள் சாத்வீக, இராசத, தாமர கூறுகளின் தொகுதிகள் ஆகும். இக்கூறுகள் ஒத்த அளவில் அமைவது இல்லை. மிகுந்தும், குறைந்தும் விளங்குகின்றன.இவ்வாறு, குண இயல்புகளில் வேறுபட அமைவதால் காலத்தாலும், இடத்தாலும் எல்லைக்குட் படுகின்ற இயல்புகள் உருவாகின்றன. பருப்பொருள் ஒர் இடத்து உளதானால் மற்றோர் இடத்து இலதாகும். இறைவனது திருமேனிய தூய கலப்பற்ற சாத்வீகத்தால் ஆனது. பருப்பொருள்களோ கலப்புற்ற சாத்வீகத்தால் ஆகியவையாகும் (மிசிர சத்துவம்). இங்கு சாத்துவிகக்