பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 169

பொய்த்தோற்றம் ஆகாது.இறைவனது சொரூப சக்தியின் விளைவாக மாயை அமைவதால், சொரூப சக்தியின் உண்மையினை இவ்வுலகுபெறுகிறது.இவ்வுலகு சொரூப சக்தியின் உண்மையினைப் பங்கு கொள்ளினும், ஜீவனுக்கு உண்மையிலேயே மயக்கத்தை விளைக்கிறது.

    ஜீவன்எல்லைக்குட்பட்ட மெளனத்தில் ஆழ்ந்து விளங்குகிறான். ஆதலால், உலகின் உண்மை நிலையினை அறிய இயலாதவன் ஆகின்றான். இவ்வுலகு பருமை நிலையிலே, உண்மையிலேயே ஜீவனிடத்துக் குழப்பத்தை விளைக்கிறது. இவ்வுலகு நிலைபேறுடையது அன்று. தன்னிலையிலும் இவ்வுலகு நிலையுதல் அற்றது. ஜீவர்களை மயக்கத்திற்கு உட்படுத்துவதிலும் நிலையாமையாகும்.
    இப்பருமை உலகு ஜீவர்களைத் திருத்துகின்ற நிலையில் சிறப்புடையதேயாகும். ஜீவர்கள், மயக்கத்தினால் அடைகின்ற அகந்தை உணர்வினை மாற்றிக் கொள்ளத் தகுந்த இடமாக இவ்வுலகம் அமைகிறது.
    இறைவனை மறந்து, அகந்தையினால் மயங்கி, பலப்பல ஏமாற்றங்களும், தோல்விகளும் உற்று, இம்மை வாழ்வின் துன்மைகளையெல்லாம் உணர்ந்து, தன் உண்மையை உணர்ந்து, தெய்வீக வழிநின்று, உய்வதற்கு வாய்ப்பான இடமாக, பயிற்சிக் களமாக இவ்வுலகு விளங்குகிறது. 
    தெய்வீக நெறி, தெய்வீகம் அல்லாத நெறி ஆகிய இருநெறிகள் பேசப்பெறுகின்றன. தெய்வீக நெறியாவது யாது? சைதன்யரைப் பின்பற்றுவோர், தெய்வீக நெறியினை ஜீவர்களது உண்மை நெறியென விளக்குகின்றனர். ஜீவர்கள் தமது உண்மை நிலையினை அறிந்து, பக்தி நெறி நின்று, தன்னை முற்றிலும் ஒப்படைத்த, அன்பின் நெகிழ்ச்சியாலே, தமது உண்மை நிலையினை உணரப் பெறுதலே தெய்வீக நெறியாகும்.