பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

த.கோவேந்தன்


ஶ்ரீ சைதன்யா 1485-வது ஆண்டு நுத்தியா என்னும் ஊரில் பிறந்தார். வங்க வைஷ்ணவத்தில் மாத்வரது வைணவக் கூறுகள் பலவற்றைக் காணலாம். பிரம்ம சமாஜத் தலைவர்கள் பக்தியினால் பெரிதும் உள்ளம் நெகிழப் பெற்றனர். கிறித்துவச் சமயத்தின் தாக்குதலைத் தகர்க்கும் வகையில் ஏசுவைச் சிறந்த பக்தனாக ஏற்றுக் கிறித்துவச் சமயத்தை மறுத்து ஒதுக்கினர்.

வங்க வைஷ்ணவம் உணர்ச்சி நிலைகளை முக்கியமாகக் கொண்டது. மஹாராஷ்ட்டிரா பக்தர்களான ஞான தேவர், நாமதேவர் ஆகியோர் ஞானத்தையும், பக்தியையும் ஒருங்கே வற்புறுத்தியவர்கள் ஆவார்கள். வைஷ்ணவக் கருத்து முறைகள் அனைத்தும் இறைவனையே அன்பின் வடிவமாகக் கொள்கின்றன. இக்கருத்து, சைவக் கொள்கைகளுள் சிவனை அன்பு வடிவத்தில் போற்றுவதோடு ஒப்ப வைத்தது எண்ணத்தக்கது.

இஸ்லாமிய அனுபூதி நெறியாகிய சூபிஸத்திலும் கிறித்துவ அனுபூதி நோக்கத்தக்கது. இறைவனை அழகு வடிவமாகக் கருதுவது வைஷ்ணவத்திற்கே உரிய சிறப்பாகும். விசிஷ்டாத்வைதம் பல நூற்றாண்டுகளாக இந்தியரது வாழ்வில் நன்கு பரவியுள்ளது. உள்பொருளைப் பிரபஞ்சத்தின் உயிராக விசிஷ்டாத்வைதம் ஒன்றுபடுத்திக் கண்டு இந்திய மெய்ப்பொருளியல் வளர்ச்சிக்குத் தனது பங்கினைத் தந்துள்ளது. சமய உலகிற்கு விசிஷ்டாத்வைதம் தந்துள்ள விளக்கமும் சிறப்புடையதே. உள்ளுணர்வினால் வாழ்வினை உணர்ந்து உண்மை, நன்மை அழகு ஆகிய நிலைத்த பண்புகளின் உறைவிடத்தை உணர்ந்து சமய வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளது. ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக வாழ்வுக்கும் தொண்டுக்கும் பேரூக்கத்தை அளித்து - இறவாத இன்ப நிலையைப் பெறவும், பிரமத்தோடு ஒன்றவும், வழிவகுப்பது விசிஷ்டாத்வைதம் ஆகும்.