பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

63

பொருள்களால் வரையறை பெறாது என்பதை அறியாலாம்.

வழியளவை என்பது பெருமொழியைப் (Major Term) பற்றிய அறிவாகும். பெரும்மொழி தொடைமொழி (ஹேது) (Middle Term) யினின்று அறியப் பெறுகின்றது. மாறாது உடன் நிகழ்வது பற்றிய அறிவினாலே பெருமொழியினைத் தொடைமொழியினின்று அறிய முடியும். தொடைமொழியும், பெருமொழியும் மாறாத தொடர்பு கொண்டிருக்கின்றன. தொடைமொழி அதற்குரிய சிறுமொழியினிடத்து (Minor Term)க் காணப்பெறுகிறது. மாறாத உடன் நிகழ்வு என்பது அடுத்தடுத்துக் காண்டலால் அறியப்பெறும். இதனை, “தொடைமொழி உள தெனின் பெருமொழி அமையும்” என்பது உணர்த்தும்.
உரையளவை (ஆகமம்) என்பது பொருந்தும் அறிவைத் தோற்றுவிப்பதாகும். சொற்களினாலே, பொருந்தும் அறிவு வெளிப்படுத்தப் பெறுவதாகும். உரையளவையால் அறியப்பெறும் அறிவு, பின்னே மற்றைய அறிவுகளால் பிழையென உணர்த்தப் பெறாமையால் உரையளவையால், தோன்றும் அறிவு பொருந்தும் அறிவாகும்.
விழிப்பு நிலையில் மனம் நினைவு கூர்கிறது. இவ்வாறு நினைவு கூர்தற்குக் கழிந்த காலத்தில் அமைந்த பதிவுகளே காரணம் ஆகும். கனவு நிலையிலும், கடந்த காலப் பதிவுகளின் அடிப்படையில் மனம் தொழிற்படுகிறது. கனவு நிலையில் காணப்பெறும் பொருள்கள், அந்நிலையில் உள்ளனவே. விழிப்பு நிலையில் காணப்பெறும் பொருள்களுக்கு அமையும் நிலை, கனவுநிலையில் காணப்பெறும் பொருள்கட்கு அமையமாட்டாது. மனமும், புறப்பலன்களும், ஆழ்ந்த உறக்கத்தில் தொழிற்படுவ்ன அல்ல. இதனால், ஆன்மா, மனத்திற்கும் புறப்பலன்கட்கும் வேறாகித் தொடர்ந்து நிலைபெறுதல் நிறுவப்பெறுகிறது.