உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செங்கோட்டிலிருந்து தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அருணாசல முதலியார் மகன் காசி விசுவநாத முதலியார், சுப்பையா மகன் நாகநாதன், இராசலிங்கம் செட்டியார் மகன் இராச குருநாதன் ஆகியோர் ஆவர். இராச குருநாதன் இளம்பள்ளி ஜமீன்தார் ஆவார்.

சுப்பராயனும், இராதாபாயும் சிறை ஆவணங்களில் தாங்கள் இருவரும் 1922 ஆம் ஆண்டே தேசிய இயக்கத்தில் சேர்ந்ததாகப் பதிவு செய்துள்ளனர். இருவரும் சென்னையில் வசிக்கும் வீடு இருந்தாலும், திருச்செங்கோட்டு முகவரியே அளித்துள்ளனர்.

சுப்பராயனுடன் சிறையில் இருந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி திருச்சி சிறை வாழ்க்கை பற்றி ‘மூன்று மாதக் கடுங்காவல்’ என்ற நூல் எழுதியுள்ளார். எல்லோரும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம், திருக்குறள் போன்ற இலக்கியங்கள் படித்ததையும், என்.எஸ் வரதாச்சாரியார் சுப்பராயனுக்குச் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க முயற்சித்ததையும் எழுதியுள்ளார். “சுப்பராயன் கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டார். பல பிளாக்குகளுக்குச் செல்வதும் வருவதுமாக இருப்பார். சிறை அதிகாரிகளைக் கண்டால் இலேசில் விடமாட்டார். ஏதாவது டோஸ் கொடுக்க ஆரம்பித்து விடுவார்” என்று கல்கி எழுதியுள்ளார்.

சிறையில் ஏ,பி,சி என்ற மூன்று வகுப்புக்கள் உண்டு. சுப்பராயனுக்கு “ஏ” வகுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அறையில் கட்டில், மேசை, நாற்காலி, ஒரு சிறு பீரோ ஆகியன உண்டு.

சிறையில் இராஜாஜி சுப்பராயனை நன்கு கவனித்துக் கொண்டதாகக் கல்கி கூறியுள்ளார். சுப்பராயன் வந்த பின்னர் தான் சிறையில் திருக்குறள் பாடம் தொடங்குமாம். சுப்பராயன் வராவிட்டால் ஆள் அனுப்பி சுப்பராயனை இராஜாஜி அழைத்து வரச் சொல்வாராம்.

✽✽✽


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

91