உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்ததால் செலக்ட் கமிட்டி கொடுத்த அறிக்கையைச் செயல்படுத்த இயலவில்லை.

ஓ. பி. இராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் சுப்பராயன் உள்துறை, காவல்துறை அமைச்சராக இருந்தபோது ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டுவர அனுமதி அளித்த காங்கிரஸ் தலைமை நட்ட ஈட்டுத் தொகையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியது.

அரசு 1802 ஆம் ஆண்டு ஜமீன் முறை ஏற்பட்டபோது இருந்த நிலவரப்படி நட்ட ஈடு தர விரும்பியது. ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தை எதிர்க்கவில்லை. நட்ட ஈடு ஜமீனை ஒப்படைக்கும் அன்றைய நிலைக்கேற்ப வழங்க வேண்டும் என்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் ஜமீன்தார்களுக்கு நட்ட ஈடே கொடுக்கக் கூடாது. அந்தத் தொகையை நீர்ப்பாசனத் திட்டங்கட்கும், நில அபி விருத்திக்கும் பயன்படுத்த வேண்டும் என்றனர். ஜமீன்தாரிடமிருந்து மீட்கப்பட்ட நிலங்களை ஏழைகட்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாட்டுத் தீர்ப்புக்களை மேற்கோள் காட்டி நட்டஈடு உயர்த்தப்பட வேண்டும் என்று கட்டுரைகள் எழுதினார். முன்னாள் முதல்வர் பொப்பிலி மகாராஜா ரங்கராவ் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற போர்டிற்கு இது குறித்து விண்ணப்பம் அனுப்பினார்.

குமரமங்கலம் ஜமீனுக்கு 83 கிராமங்களில் நாற்பதாயிரம் ஏக்கர் விவசாய பூமியும், தனிப்பட்ட முறையில் சுப்பராயனுக்கு 156 ஏக்கர் நிலமும் இருந்தது. சுப்பராயனுக்குச் சொந்தமான குமரமங்கலம் ஜமீனின் பெருமை, பரப்பளவு குறித்து ரஷ்ய எழுத்தாளர் “Rostislav” என்பவர் தாம் எழுதிய “AGRARIAN INIDA” என்னும் நூலில் குறித்துள்ளார்.


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

99