உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலகாலம் (1811-1816) ஆங்கிலேயர் கைப்பற்றிய இத்தீவுகளை டச்சுக்காரர்கள் மீண்டும் அடிமைப்படுத்தி ஆண்டனர். 1908 முதல் விடுதலைப் போர் தொடங்கினாலும் 1942-1945ல் ஜப்பான் அடிமைப்படுத்தியபின் விடுதலைப் போர் தீவிரம் அடைந்தது. விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கியவர் சுகர்ணோ.

இந்தோனேஷியா 1949 டிசம்பர் 27 அன்று சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசாங்கச் சார்பில் ராஜகுமாரி அமிர்த கௌர் அவர்களும் டாக்டர் சுப்பராயன் அவர்களும் இந்தோனேஷியா சுதந்திர நாள் விழாவில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டனர். டாக்டர் சுகர்ணோ அதிபராகப் பதவியேற்றார். இந்தியப் பிரதமர் பண்டிதநேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இருவரின் விருப்பப்படி டாக்டர் சுப்பராயன் விடுதலை பெற்ற இந்தோனேஷியாவின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பான்-இஸ்லாமிய இயக்கம் இந்தோனேஷியாவில் இயங்குவதை முறியடிக்க டாக்டர் சுப்பராயன் பணி அமையும் என்று வல்லபாய் படேல் உறுதியாக நம்பினார்.

தாருல் இஸ்லாம் என்ற மதவாத இயக்கமும், பாகிஸ்தான் பிரதிநிதிகளும் இணைணந்து செய்யும் இந்திய-இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கண்ட சுப்பராயன் அரசியல் ரீதியாக அதை முறியடிக்க இந்தோனேஷிய - இந்திய நட்பு உடன்படிக்கைக்கு அடித்தளம் இட்டார். இதன் விளைவு 1951 மார்ச் 3 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் டாக்டர் சுப்பராயன் அவர்களும், இந்தோனேசியாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ரோயன் அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்தோனேஷியாவின் வரலாற்று நூல்களும், ஆவணங்களும் டச்சு மொழியில் இருப்பதால் டச்சு மொழி தெரிந்த தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள மாணவர்களும் அதில் ஈடுபட்டு இந்தோனேஷியாவின் மனித நாகரிக வளர்ச்சியைக் காண-


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

112