உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜாஜியும் தம் ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு டெல்லி செல்ல விரும்பினார். இந்தப் பயணத்தில் சுப்பராயனும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இராஜாஜி சுப்பராயனுக்குக் கடிதம் எழுதினார். சுப்பராயன் தன்னால் வர இயலவில்லை என்று கடிதம் எழுதினார். இராஜாஜியின் நிலையை விளக்கிக் கடிதம் எழுதியதாகவும் எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சிகள் வலுவான எதிர்ப்பு, காமராசரைச் சார்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு, பிரதமர் நேருவின் ஆதரவின்மை, இராஜாஜியின் பிடிவாதம் அனைத்தும் சேர்ந்து சுப்பராயனை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது. நெருக்கடியைச் சமாளிக்க முடியாத இராஜாஜி சட்டசபைக்கு வராமலேயே 27.03.1953 அன்று முதல்வர் பதவியை இராஜினாமா செய்து கவர்னருக்கும், நேருவிற்கும் கடிதம் எழுதினார்.

பதவியை இராஜினாமா செய்தபின் முதல்வர் பதவிக்கு சி. சுப்பிரமணியத்தைக் கொண்டு வர விரும்பி இராஜாஜி முயற்சிகள் செய்தார். காமராசர் சுப்பராயனை முதல்வராக்க விரும்பினார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போது பெற்ற அனுபவம் இராஜாஜி - காமராசர் இடையே போட்டிமனப்பான்மை இவைகளையெல்லாம் உணர்ந்த சுப்பராயன் “முதல்வராக விருப்பமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

முதல்வர் தேர்வு வந்தது. காமராசர் தாமே நிற்க முடிவு செய்து போட்டியிட்டார். இராஜாஜியின் வேட்பாளராக சி. சுப்பிரமணியம் காமராசரை எதிர்த்துப் போட்டியிட்டார். காமராசர் வென்று தமிழக முதல்வரானார். சி. சுப்பிரமணியம் அவர்களின் திறமையை அறிந்திருந்த காமராசர் சி. சுப்பிரமணியத்தை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு முக்கியத் துறைகளை அவரிடம் ஒப்படைத்தார்.

✽✽✽


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

117