உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. சென்னையில் வாழ்ந்த இல்லங்கள்

சென்னை எழும்பூர் ‘கமாண்டர் இன் சீப் ரோடு’ என்று அழைக்கப்பட்ட இன்றைய எத்திராஜ் சாலையில், எத்திராஜ் கல்லூரிக்கு எதிரில் இராணி சீதை மண்டபத்திற்கு அருகே 3 ½ ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சுப்பராயனுக்குச் சொந்தமான மிகப்பெரிய பங்களா ஒன்று இருந்தது. இந்த பங்களா ‘Fair Lawns’ என்று அழைக்கப்பட்டது. 1920ல் சென்னைக்கு வந்து பொதுவாழ்வைத் தொடங்கிய சுப்பராயன் தம்பதிகள் 1936 வரை இந்தப் பங்களாவில்தான் வாழ்ந்தனர். சுப்பராயன் குடும்பம் அதிக காலம் வாழ்ந்தது இந்தப் பங்களாவில்தான்.

1936 ல் இந்தப் பங்களாவை பிரசிடென்சி கிளப்பிற்கு விற்றுவிட்டு சென்னை இராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் இருந்த ‘Whites Garden’ என்ற பங்களாவிற்கு சுப்பராயன் குடியேறினார்.

பின்னர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இருந்த ‘Lomound’ என்ற பங்களாவில் குடியேறினார். அதன்பின் சென்னை தியாகராய நகரில் இருந்த ‘Irrawaddy House’ என்ற பங்களாவில் வாழ்ந்தார்.

1942ஆம் ஆண்டு இறுதியில் சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் இருந்த ‘Mange Parbat’ என்ற பங்களாவிற்குச் சுப்பராயன் குடும்பம் குடியேறியது. மூன்றாண்டு கழித்து 1945ல் சென்னை ஜார்ஜ் டவுன் கொண்டி செட்டித் தெருவில் இருந்த ஒரு பங்களாவில் சுப்பராயன் குடும்பம் குடியேறியது.

1946ல் சென்னை மயிலாப்பூர் மவுபரீஸ் ரோட்டில் இருந்த (இன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை) ‘Meru’ என்ற பங்களாவில் குடியேறினார்.


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

131