உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1949 ஆம் ஆண்டு பிரோஜாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்து பெற்றோருடைய ஆசி பெற்றுக் கொண்டு மீண்டும் அமெரிக்கா சென்று கிறித்துவ நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 1950ல் இந்தியா திரும்பிய பி.பி. குமாரமங்கலத்திற்கு இந்திய ராணுவத் தலைமை அலுவலகத்தில் பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது. மேற்கு ராணுவ கமாண்டராகவும், பின் இராணுவத் தலைமை இடத்தில் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பிரிகேடியர் பயிற்சிக்காக 1952ல் சேர்ந்தார். வெலிங்டன் DSCC கல்லூரியில் கமாண்டன்ட் பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியின் முதல்வருமானார். கல்லூரி முதல்வராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் பலராலும் போற்றப் பட்டன.

பி.பி. குமாரமங்கலம் லண்டனில் உள்ள இம்பீரியல் இராணுவக் கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். பின் இந்திய ராணுவத் தலைமையகத்தில் லெப்டினன்ட் ஜெனரல் பதவி, கிழக்கு கமாண்டின் பொது கமாண்டிங் ஆபீசர், துணை இராணுவத் தளபதி, இணை இராணுவத் தலைமைத் தளபதி முதலிய பொறுப்புக்களை ஏற்றார்.

இந்திய பாகிஸ்தான் போருக்குப்பின் ரஷ்ய நாட்டு டாஷ்கண்டில் நடைபெற்ற லால்பகதூர் சாஸ்திரி அயூப்கான் பேச்சு வார்த்தையின் போது பிரதமருடன் பி.பி. குமாரமங்கலம் சென்றார். டாஷ்கண்டில் எதிர்பாராத வகையில் அகால மரணம் அடைந்த லால்பகதூர் சாஸ்திரியின் உடலோடு வந்து விமானத்திலிருந்து இறங்கும்போது பிரதமர் பூதவுடலைத் தாங்கும் வாய்ப்பைப் பி.பி. குமாரமங்கலம் பெற்றார். 1965 இல் இந்திய நாடு போரில் ஈடுபட்டபோது இவர் ஆற்றிய பணிகள் வீரம் செறிந்தவை.

10.06.1966ல் இந்திய ராணுவத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக பி.பி. குமாரமங்கலம் நியமிக்கப்பட்டார்.


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

156