உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் Bird & Co நிறுவனம். அந்த நிறுவனத்தில் பொறுப்பாளர், தலைவராக ஜெயவந்த் கோபால் நியமிக்கப்பட்டார். நான்காண்டுகள் அங்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றி அந்நிறுவனத்தை விட்டு விலகினார்.

மேற்கு வங்காளத்தில் தேசிய தோல் பதனீட்டுத் தொழிற்சாலை(National Tannary Co Ltd.,) ஒன்று இருந்தது. அந்நிறுவனம் மிகவும் நலிவடைந்திருந்தது. அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயவந்த் கோபால் நலிவடைந்த காரணத்தை ஆராய்ந்து குறை களைந்து அந்நிறுவனத்தை வளமானதொரு நிறுவனமாகத் தலை நிமிர வைத்தார். இந்த அரிய செயல் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. பெரும் நட்டத்தில் இயங்கிய INDIA MACHINERY என்ற நிறுவனத்தின் ஆலோசராகவும் பொறுப்பேற்றுச் சேர்ந்து மிக விரைவில் அந்த நிறுவனத்தை நல்ல இலாபத்துடன் இயங்கச் செய்தார்.

இறுதியாக ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான Reyrolle Burns Ltd., என்ற கம்பெனியின் நிருவாக ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 09.02.1988 அன்று பம்பாயில் காலமானார். எப்பொழுதும் எளிமையை விரும்பும் இவர் இசையில் ஈடுபாடு உடையவர். தமிழ்ப் பண்பாடு, பழக்க வழக்கத்திலும் பற்றாளராக விளங்கினார்.

ஜெயவந்த் கோபால் - பினா தம்பதியருக்கு கௌரி, ருக்மணி, மீனாட்சி என்ற மூன்று பெண்கள். கிருஷ்ணன் என்ற ஒரு ஆண் ஆக நான்கு மக்கள்.

கௌரியின் கணவர் கொங்கணாபுரம் கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர் அவர்களின் இரண்டாவது மகன் அர்த்தநாரீசுவரன். கௌரி டெல்லியில் ஆற்றும் கல்விப் பணிக்காக பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். ருக்மணியின் கணவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹால்தியா I.A.S., ருக்மணியும் I.A.S., பட்டம் பெற்றவர். மீனாட்சியின் கணவர் ஆந்திராவைச் சேர்ந்த ரவிராவ். மகன் கிருஷ்ணனின் மனைவி ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டியார் சமூக ருக்மணி என்பவர்.

✽✽✽

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

161