உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சார்பில் பல கொடைகள் அளிக்கப்பட்டதுடன் விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் உப்பு ஊறுகாய் நீராகாரம் வேண்டுவோர் சகலர்க்கும் அளிக்கப்பட்டன. 1803 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து ஆத்மாராம் என்பவர் திருச்செங்கோட்டை 2887 ஸ்டார் பகோடாவிற்கு (10104 ரூபாய்) குத்தகைக்கு எடுத்தார். 1792ல் தாலூக்கா அமைக்கப்பட்டது. 1886ல் பஞ்சாயத்து ஏற்படுத்தப்பட்டது. இப்போது நகராட்சியாக உள்ளது.

திருச்செங்கோட்டில் சோழ நாட்டிலிருந்து அழைத்து வந்து குடியமர்த்தப்பட்ட குலோத்துங்கபட்டர், குலசேகரபட்டர் வழி வந்த ஆறு குருக்கள் அர்ச்சகர்கள் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் சிலர் மடம் அமைத்துக் குலகுருக்களாகவும் விளங்குகின்றனர்.

இங்கு குணசீலர், கவிராஜபண்டிதர், திருச்சிற்றம்பலக் கவிராயர், அழகு நாச்சி, சதாசிவபண்டிதர், வீரபத்திரக் கவிராயர் முதலிய பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். தி.அ. முத்துசாமிக்கோனார் என்னும் பெரும்புலவர் (1858-1944) அச்சகம் நிறுவி கொங்குவேள், விவேகதிவாகரன் முதலிய இதழ்கள் நடத்தினார். பல இலக்கியங்களைச் சுவடியிலிருந்து பெயர்த்து எழுதி அச்சிட்டதுடன் பல இலக்கியங்களும் பாடினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம். காளியண்ண கவுண்டர் அவர்கள் முயற்சியால் திருச்செங்கோட்டில் பல ஆண்டுகளாகக் கண்ணகி விழா வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி நடைபெற்று வருகிறது. சிலர் அர்த்தநாரீசுவரரைக் கண்ணகியின் வடிவம் என்பர்.

ஜவுளி உற்பத்தி, வாகனப் போக்குவரத்து, ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் தொழில் (ரிக்), முட்டை உற்பத்தி, கோழி வளர்ப்புப் போன்றவைகளில் திருச்செங்கோடு முன்னணியில் உள்ளது.

✽✽✽


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

15