உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்க் கட்சிகள் மதித்த முதலாவது அமைச்சர்

27.11.1928 அன்று நகராட்சிகள் சட்டத் திருத்த மசோதாவை செலக்ட் கமிட்டி பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று சுப்பராயன் விரும்பினார். தெலுங்குப் பகுதி உறுப்பினர்களும், எஸ். சத்தியமூர்த்தி போன்ற சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்களும் சுப்பராயன் கருத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர். வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்ப்புக் கடுமையாக இருந்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ. மாணிக்க வேல் போன்றவர்களும், நீதிக் கட்சியைச் சேர்ந்த பி.டி. ராஜனும், சுப்பராயன் அணியில் இல்லாத ஜே. குப்புசாமி, கே. கென்னத், சுவாமி சகஜானந்தா ஆகியோரும் சுப்பராயன் அவர்கட்கு ஆதரவாக வாக்களித்தனர். சுப்பராயன் அமைச்சரவையின் நல்ல கருத்துக்களை எதிர்க்கட்சியினரும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு தவறான தகவல்

04.12.1926 அன்று சுப்பராயன் சென்னை மாகாண முதலாவது அமைச்சரானது பற்றிய தவறான தகவல்களைப் பலர் எழுதியுள்ளனர். “நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர் ஒரே இரவில் கட்சி மாறி முதலாவது அமைச்சர் பொறுப்பை ஏற்றார்” என்று எழுதியுள்ளனர். இது தவறான தகவலாகும்.

1919 ஆம் ஆண்டு இராஜாஜி சேலம் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட போதே சுப்பராயன் அவர்களும் காங்கிரசில் இணைந்தார். 1919ல் நடைபெற்ற அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு சுப்பராயன் அழைக்கப்பட்டார். இராஜாஜி, சேலம் விஜய ராகவாச்சாரியாருடன் கலந்து கொண்டார்.

1920 ஜூன் 21, 23 நாட்களில் நடைபெற்ற திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் சுப்பராயன் கலந்து கொண்டார். தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானித்தது. தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்புக் குழுவில் சுப்பராயன் இடம் பெற்றார்.


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

67