உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கறிஞர் தொழில் செய்யும் போதே லோகமான்ய பாலகங்காதர திலகர் கொள்கையில் ஈர்க்கப்பட்டுப் பொதுப்பணியாற்றினார். 1917 முதல் 1919 வரை சேலம் நகராட்சி மன்றத் தலைவராய் விளங்கிய இராஜகோபாலாச்சாரியார் 1919ல் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1923ல் சேலத்தில் காந்தி சேவா சங்கம் தொடங்கினார். காங்கிரஸ் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புக்களையேற்றார். “இராஜாஜி” என அழைக்கப்பட்டார்.

காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினார். அவர் வாழ்க்கைத் துணைவியார் அலர்மேலுமங்கம்மாள் இறந்துவிடவே அம்முயற்சி தனக்கு ஆறுதலாக இருக்கும் என்று எண்ணினார். குமரமங்கலம் ஜமீனின் வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் இராஜாஜி. இராஜாஜியின் மூத்த சகோதரர் சீனிவாசய்யர் குமரமங்கலம் ஜமீனில் கணக்கராகப் பணியாற்றி வந்தார். சுப்பராயன் - இராதாபாய் திருமணம் தொடர்பாக சுப்பராயனின் தாயார் பாப்பாயம்மாள் அவர்களுக்குத் தெரிவித்ததுடன் திருமண ஏற்பாடுகளைச் செய்து மங்களூரில் நடைபெற்ற திருமணத்திலும் பங்கு கொண்டவர் இராஜாஜி.

காந்திஜி பெயரில் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்பிய இராஜாஜி தன் எண்ணத்தை சுப்பராயனிடம் தெரிவித்தார். சுப்பராயன் தன் மாமாவும், புதுப்பாளையம் மிட்டாதாரும் ஆகிய இரத்தினசபாபதிக் கவுண்டரிடம் கூறி இராஜாஜிக்கு நிலம் அளிக்க ஏற்பாடு செய்தார். நந்தவனம் என்று அழைக்கப்பட்ட தன் சொந்த நிலப் பகுதியில் இரண்டு கிணறுகளோடு கூடிய நான்கு ஏக்கர் நிலத்தை இராஜாஜிக்கு இரத்தின சபாபதிக் கவுண்டர் இலவசமாக அளித்தார்.

06.02.1925ல் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க காந்திஜி வர இயலாத காரணத்தால் பெரியார் அவர்கள் தொடங்கி வைத்தார். 17.09.1879ல் ஈரோட்டில் வேங்கட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியினர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்த


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

79