130
பாரதிக்குப் பின்
ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையேயற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி. வேட்டையில் வேடுவன்மேல் பாயத் திரும்பிய மிருகம்போல பயந்த ஒரு முரட்டுத்தனம். சிலிர்சிலிர்ப்பு.”
இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம்.
சர்வ சாதாரண விஷயங்களைக் கூட வெகு அழகான நடையில் லா.ச. ரா. குறிப்பிடுவது வழக்கம்.
அவள் அழுதாள், அல்லது கண்ணீர் சிந்தினாள் என்பதை அவர் இவ்வாறு சித்திரிக்கிறார்: (ஒருத்தி சிந்திய கண்ணீர் ஒருவன்மீது விழுந்ததைக் குறிப்பிடுகையில்)—“அவன் பிடரியில் இரு நெருப்புத் துளிகள் சுரீலெணச் சுட்டுப் பொரிந்து நீர்த்தன.”
இத்தகைய அழகான பிரயோகங்கள் லா. ச. ரா. எழுத்தில் சகஜமாகக் காணப்படும்.
‘நிமிஷத்தின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக் கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’
‘விசனத் திரை லேசாய் அவன் மேல் மடிபிரித்து விழுகையில்—’
‘சப்தமே சப்திக்க சோம்பிற்று,’
‘மாலை முதிர்ந்து இருள் தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற் போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும் ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.’
“நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைதீட்டி, பாம்பின் ‘சொரேலுடன்’ சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடியென இளம் வெய்யிலில் பளபளத்தது.”