தமிழ் உரைநடை
147
நமஸ்கரித்து எழுகையில், அவளைச் சூழ்ந்த இருவில் மாடத்தில் அழும் அகல் சுடர் அவள் முகத்தை ஏற்றுகையில், மூக்குத்திகளிலிருந்து நில மின்னல்கன் கொடி பின்னிக்கொண்டே பிறந்து அவன் உடலை ஊடுருவின. அவள் புருவங்களிடைக் குங்குமப் பொட்டிலிருந்து ஒரு கண் திறந்தது. அவன் உடல் புல்லரித்தது.
அவள் அவனை நோக்கி வந்தாள், துளசி மாடத்து விளக்குச் சுடரில் குளித்துவிட்டு, அதனின்றே வெளிப்பட்டுச் சகிக்க முடியாத தூய்மையுடன் அவனை நோக்கி வருகையில் அடிவயிற்றில் அலைகள் சுருண்டு சுருண்டு தொண்டைவரையில் எழுந்து உள் வீழ்கையில் வேகந்தாளாது உடல் தவித்தது. அவள் கிட்ட வந்து ஊஞ்சலடியில் உட்கார்ந்து அவன் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்; செங்குத்தான பாறை நுனியிலிருந்து யாரோ தள்ளி விட்டாற் போல் மூர்ச்சை, உடல் நினைவை அடித்துக்கொண்டு போய்விட்டது.
கூடத்தில் சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது” (இதழ்கள்)
லா. ச. ரா. கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரக்கூடிய ஒரு உண்மை, அவர் உவமைகளை அதிகமாக உபயோகிக்கிறார் என்பது. சில சந்தர்ப்பங்களில், வாக்கியம் தவறாது ஒரு உவமை மிளிரும்; சில இடங்களில் ஒரே வாக்கியத்தில் இரண்டு மூன்று உவமைகள் கூடத் தலை காட்டும். நயமான உவமைகள் லா. ச. ரா. எழுத்தை அணி செய்கின்றன.
“பிருகா அப்படித்தானிருந்தாள். புறாப் போல் சின்ன முகம். நெட்டிபோல் லேசான, சிறிய உடல் அமைப்பு. கிண்டி மூக்கிலிருந்து ஜலம் கொட்டுவது போல் சதா பேச்சு.”