155
ஓடும் வெகு நுட்பமான எண்ணச் சிதர்களில் அவசரத்தையோ, அர்த்தங்களின் அனுஸ்வரங்களையோ ஒரு கொச்சைப்பதம் தைரியமாய்க் கவ்விப் பிடித்து சந்ததியின் பயனுக்கு நிரந்தரமாய் நிறுத்தி விட முடியும். அகராதியில் உள்ள அத்தனை ஆயிரம் இலக்கண வார்த்தைகளும் அணி அணியாய்ப் பறந்து துரத்தினாலும் எட்ட முடியாத நிலைமைகள் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றன. ஐயோ, நெஞ்சில் இருக்கிறது, சொல்லவல்லையே என்னும் தவிப்புக்கள் எவ்வளவோ இருக்கின்றன. அம்மாதிரி இடங்களில் பிரம்மாஸ்திரம் போல் கொச்சையைப் பண்ணியே தீரவேண்டியிருக்கிறது. இன்னும் பார்க்கப் போனால், அதிகமாக மெருகு ஏற்றி ஏற்றி இலக்கணத்தில் செப்பனிட்ட பாஷையால் அர்த்தத் தேய்வுபட்ட விஷயங்கள் கொச்சை பாஷையில் புத்துயிர் பெறக்கூடும். ஆனால் வெறுமென ‘இந்தாங்க, வந்தாங்க, இருந்தாங்கோ. ஏடீ குட்டி, ஏ புள்ளே!’ இந்த ரீதியில் பக்கம் பக்கமாய் நிரப்பி விட்டால் மாத்திரம் கொச்சையை முறையாய் உபயோகிப்பதாகி விடாது. அர்த்த புஷ்டியுடன் எழும் கொச்சைதாம் வாக்கில் நோக்கத்தை நிரப்பும் வார்த்தைகள்.
சத்தியத்தின் நேர்வாக்காய் அமைவதால் கொச்சைக்கு உக்கிரம் உண்டு. ஆகையால் கொச்சையின் உபயோகத்திற்குப் பொறுப்பு உண்டு. இலக்கியத்தில் உண்மையான பக்தி சிரத்தையுள்ளவர்களுக்கு இந்த உக்கிரம் தெரியாமல் போகாது. இடமும் அளவு மறிந்து உபயோகிப்பவனுடைய பேனா முனையிலும் நாக்கு நுனியிலும் கொச்சை வாக்கு பெரிய சக்தியாக மாறிவிட முடியும் என்பது என் துணிபு.”