192
பாரதிக்குப் பின்
இல்லாத எத்தனை எத்தனையோ வழக்கொழிந்த சொற்கள் இவர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் அனாயாசமாகக் கையாளப்படுகின்றன. வார்த்தைகள் புதிதாய்ச் செய்தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சம் பேர்களுக்கிடையிலாவது வாழையடி வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களை சுவீகரித்துக் கொள்வதால் நம் மொழியின் தூய்மையோ, புனிதமோ ஒன்றும் கற்பழிந்து போய்விடாது என்பதுதான் என் தாத்புரியம்.”
இம் மேற்கோள் நீல, பத்மநாபனின் கருத்துக்களை தெளிவுபடுத்த உதவுவதோடு அவருடைய உரைநடையின் மற்றொரு வகையை—கட்டுரைகளில் அவர் கையாள்கிற நடையின் தன்மையை—காட்டுகிற சான்று ஆகவும் அமைகிறது.
நீல. பத்மநாபனின் உரைநடையில் மலையாளக் சொற்களோடு சமஸ்கிருத பதங்களும் தாராளமாய் கலந்து வருகின்றன.
“சிங்க வினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத் தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.”
‘நாதஸ்வரமும் கொட்டு மேளமும் கர்ணாத்தமாக லேசாக கேட்டுக்கொண்டிருந்தது.’