66
பாரதிக்குப் பின்
வரதாச்சாரியாரைக் கூடத் தோற்கடித்து முதுகில் மண் காட்டக் கூடியவராயிருக்கிறார் என்றால், வேறு என்ன சொல்லவேண்டும்?
இவருடைய கச்சேரி சம்பந்தமாக ஒரு விஷயத்தில் நான் அபிப்பிராயப் பேதப்படுகிறேன். அதாவது அதைச் சங்கீதக் கச்சேரி என்று சொல்வது பொருத்தமில்லை என்று நினைக்கிறேன். ‘ஸ்வரங்களின் மகாயுத்தம்’ என்று சொல்வது ஒரு வேளை பொருத்தமாய் இருக்கலாம். கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்னால் பார்த்தால் மனுஷ்யர் வைதிகக் குடுமியுடன், கதர்ச் சட்டை போட்டுக் கொண்டு பரம சாதுவாய்க் காணப்படுகிறார். கச்சேரி ஆரம்பித்துவிட்டாலோ, அடே அப்பா! என்ன மாறுதல்! அந்த ஸ்வரங்கள் தான் அவரிடம் என்னபாடு படுகின்றன! ‘நில்லு அங்கேயே!’ என்று இரண்டு கையாலும் தடுத்து நிறுத்துகிறார் ஒரு சமயம். ‘வந்துடு இங்கே!’ என்று இரு கைகளாலும் அணைத்துப் பிடித்துத் தலையோடு தலை முட்ட விடுகிறார் இன்னொரு சமயம். மற்றொரு சமயம் பேயறைவது போல் ஒரே அறையாய் அறைகிறார். அப்புறம், ஸ்வரங்களை உரலில் போட்டு உலக்கை கொண்டு அவல் இடிப்பது போல் இடிக்கிறார். பின்னர் வில்லில் நாணேற்றிக் காதளவு இழுத்து வாங்கிப் பாணப் பிரயோகம் செய்கிறார். பிறகு கழுத்தைப் பிடித்து நெட்டுகிறார். கோபம் மித மிஞ்சிப் போய்விட்டாலோ. ‘இதோ வேருடன் கல்லி எறிந்து விடுகிறேன் பார்!’ என்று சொல்லி இரண்டு கையையும் கீழேகொடுத்து வேரைப் பறிக்கிறார். நல்ல வேளையாக, மேடையில் உட்கார்ந்திருத்தாரோ, கான மந்திரத்தின் தரை பிழைத்ததோ! தரையில் மட்டும் உட்கார்ந்திருந்தால், நிச்சயமாகப் பெரிய குழி ஒன்று தோண்டியிருப்பார் பாவம்!
சங்கீத வித்வான்களிடம் அங்க சேஷ்டைகளை நான் அதிகமாய் ஆட்சேபிப்பதாக நேயர்கள் எண்ணக் கூடாது.