13. மௌனி
“ஒதுங்கி நின்று, உள்ளதெல்லாவற்றையும், ஒரு குறிப்பிட்ட கோணத்தின் நோக்குப் பூராவையும், கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மௌனி சாதித்திருக்கிறார்... அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் ‘மௌனி’ என்று சொல்லலாம்,”
மெளனி கதைகள் பற்றி க. நா. சுப்ரமண்யம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மௌனி கதைகளின் நயங்களை ஆராய்வது என் நோக்கம் அல்ல, தமிழ் உரை நடையில் புதுமையும் வளமும் சேர்த்திருப்பவர்களில், பரிசோதனை செய்திருப்பவர்களில், முக்கியமான சிலரின் வசனநடை குறித்துச் சிந்திப்பது தான் இத்தொடரின் நோக்கம் ஆகும். அந்த ரீதியில் மௌனியின் உரை நடையை இங்கே கவனிக்கலாம்.
உளப் பதிவுகளை, மனசஞ்சலங்களை, நினைவுச் சலனங்களை, உணர்வுச் சுழிப்புகளை, சிந்தனை ஓட்டங்களைக் கொண்டு மௌனி தன் கதைகளைப் பின்னியிருக்கிறார். அதற்குத் தக்கபடி எளிமையாக ஆரம்பித்து. நடை போகப் போக ஒரு கனமும் பின்னலும் பெறுவதை அவர் கதைகளில் காணலாம்.