உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் பெற்றது. இவ்வேடு நிற்கும் வரையிலும் உரைப்பகுதியும் தொடர்ந்து வந்தது. சில குறட்பாக்களுக்குப் புதிய உரையும், பழைய உரைகள் சிலவற்றுக்கு மறுப்புமாக இவ்வுரை விளங்கியதால் தமிழறிஞரிடையே ஒரு பரபரப்பான வரவேற்பு இதற்கு இருந்தது. ஏறக்குறைய 83 குறளுக்குப் பாரதிதாசன் பரிமேலழகர் உரைக்கு மாறுபட்டும் உடன்பட்டும் கருத்துக்கள் வழங்கியுள்ளார். ஆனால் இவ்வுரைப் பணி முற்றுப் பெறவில்லை.

தலையங்கம், வெண்பா, வினா விடைப் பகுதி, துணுக்குச் செய்திகள், புதுவைச் செய்திகள், மாசுக்குள் மதிஎன்ற தலைப்புகளின் கீழும் நிறைய செய்திகள் வெளியிடப்பட்டன.

பாரதிதாசன் புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால் தமக்கென்று ஓர் இதழ் இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, குயில் கிழமை இதழ் தோன்றியது. இது முன்பு பாரதிதாசன் நடத்திய இதழ்களை விடச் சிறப்பாக வெளிவந்தது. புதுச்சேரி மாநிலத்தின் அரசியற் செய்திகளைச் சூடாக அலசியது. தமிழறம், தமிழ் ஒழுக்கம், ஆகியவற்றைப் போற்றியது; சாதிசமயத்தைச் சாடியது. சமுதாயப் பொருளாதாரச் சிந்தனைகளை வாரி வழங்கியது.

குயில் திங்களிருமுறை இதழ், 1962

இத்திங்களிருமுறை இதழ் சென்னையிலிருந்து வெளிவந்தது. சென்னையில் பாரதிதாசன் தலைமையில் நிறுவப்பட்ட அனைத்துலகக் கவிஞர் மன்றத்தின் கவிதைக் குரலாக இது வெளிவந்தது, எட்டு இதழ்களே வெளிவந்தன. இந்த எட்டு இதழ்களும் மிகச் சிறப்பானவை. பாரதிதாசனின் பன்முக ஆளுமையையும் கொள்கை முதிர்ச்சியையும் இவ்வேடுகள் விளம்பரப்படுத்துகின்றன.

அரசியலிலும் கட்சிக் கோட்பாடுகளிலும் இருந்த இறுக்கம் நெகிழ்ச்சியுற்றதையும் நடுநிலை ஆய்வையும் இந்திய ஒருமைப் பாட்டையும் உலகளாவிய சிந்தனைகளையும் காணலாம்.

1962ஆம் ஆண்டு 'பம்பாய் அஞ்சுமன் தாராகி உருது' என்ற தாய்மொழிகாக்கும் நிறுவனம் இந்திய நாட்டின் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கவிஞரை வரவழைத்துக் கவியரங்கம் ஒன்று நடத்தியது. தமிழின் சார்பாகப் பாரதிதாசன் அழைக்கப்பட்டிருந்தார்.