பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பர்கள் அனுப்பிவைத்த நிதியும், வீரவாலி நாடக வசூலுமாகச் சில ஆயிரங்கள் சேர்ந்தன. பெரியார் ஈ.வெ.ரா. ரூ.150-ம், கவிஞர் கம்பதாசன் ரூ.500-ம், தமிழறிஞர் கி.வ.ஜ. ரூ.25-ம் நிதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் அன்பர்கள் இந்நிதி வசூல் பொறுப்பை அறிஞர் அண்ணாவிடம் ஒப்படைத்தனர். அண்ணாவின் தலையீட்டால் நிதி வசூல் விறுவிறுப்பும் விளம்பரமும் பெற்றது. தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் நிதி குவிந்தது.

29.7.46ஆம் நாள் பாரதிதாசனின் நிதியளிப்பு விழா சென்னை பச்சையப்பன் திடலில் நடைபெற்றது. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ., பி.எல். அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். குளிக்கரை பிச்சையப்பாவின் நாதசுர இசையோடும், இசையரசு தண்டபாணி தேசிகரின் தமிழிசையோடும் விழா துவங்கியது.

திருவாளர்கள் செங்கல்வராயன் டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி, டாக்டர். ஆர்.பி. சேதுப்பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கே.ஏ.பி. விசுவநாதம், ப. ஜீவானந்தம், இரா. நெடுஞ்செழியன், திருமதி. குஞ்சிதம் குருசாமி ஆகியோர் பாராட்டுரை வழங்கிச் சிறப்பித்தனர். அறிஞர் அண்ணா தமிழக மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்திப் பாரதிதாசனுக்கு ரூ. 24,300 அடங்கிய பொற்கிழியை வழங்கினர். சலகை ப. கண்ணனும், டி.என். இராமனும், நிதியளிப்பு விழா மலர் ஒன்று வெளியிட்டனர். தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர் பலர், அதில் பாவேந்தரைப் பற்றி அரிய கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்

இம்மன்றம் 26.01.62 வெள்ளி மாலை பாரதிதாசன் குடியிருந்த தியாகராயநகர் இராமன் தெரு இல்லத்தில் தொடங்கப்பட்டது. சென்னைக் கவிஞர்களான நா.ரா. நாச்சியப்பன், வல்லம் வேங்கடபதி, வேழவேந்தன். முருகுகந்தரம், தமிழ்முடி, தமிழழகன், நா.க.முத்தையா, பொன்னடியான், நாரண துரைக்கண்ணன், செந்தாமரை, பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம், ஆகியோர் இல்லத்தில் கூடியிருந்தனர்.

பாரதிதாசன் இளையமகள் சகுந்தலா பாரதியும் பாரதிதாசனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். வயது ஐம்பதிருக்கும். நன்றாகப்