20.04.1964 அன்று மாரடைப்பால் கடுமையாகத் தாக்கப்பட்டு சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் காலை அவர் ஆவி பிரிந்தது.
21.04.1964இல் தமிழகச் செய்தி ஏடுகள் பாரதிதாசன் இறப்புச் செய்தியைத் தலைப்புச் செய்தியாகப் படங்களுடன் வெளியிட்டன. பாரதிதாசன் உடல் இராமன் தெரு இல்லத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைப் பிரமுகர்களும், நடிகர்களும், இலக்கிய அன்பர்களும் பாரதிதாசனைக் கடைசி முறையாகக் காணத் திரளாக வந்திருந்தனர்.
பிறகு கவிஞரை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்சனை எழுந்தது. மன்னர் மன்னன் புதுச்சேரியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். கவிஞரின் உடல் காரில் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பாரதிதாசன் வீடு தொட்டிக் கட்டுவீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென் வடலாக அவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச்சுற்றி மாலைகளும், மலர் வளையங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. கவிஞரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தனர். கவிஞரின் மகன் மன்னர் மன்னன் சுவரில் தலையை மோதிய வண்ணம் கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடியான் அருகிலிருந்து அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு-புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும், கவிஞர்களும், புலவர்களும், பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர்.
பாவேந்தரின் இறுதி ஊர்வலம் 22.04.64 ஆம் நாள் காலை பத்து மணிக்கு அவர் வீட்டிலிருந்து துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக்கேணியில் இறந்தபோது, அவரை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் இருபதுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பாரதியின் நண்பர் நீலகண்ட பிரம்மச்சாரி வருந்திக் கண்ணி வடித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இறுதி ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஒருகல் தொலைவு இருந்தது. புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினார். வேறு