கல்வியும் ஆசிரியப் பணியும்
15
அவர்களுடைய பேச்சுக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து நடத்துமாறு கட்டளையிட்டார். மாணவர் கீழ்க்கண்ட வரிகளைப் பாடினர்.
வறியோர்க் கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை
நறுக்கத் தொலைந்ததந்தப் பீடை
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை
இதைப்பாடியதும் நாயுடுவின் ஆட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே கல்வித்துறைத்தலைவர் இப்பாடலை அப்படியே பிரெஞ்சில் மொழிபெயர்த்துத் தருமாறு கூறினார். மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்டது. அதைப் படித்து விட்டுக் கல்விக் தலைவர் உள்ளம் மகிழ்ந்தார். "இது தானய்யா நாம் இன்று எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி. சுப்புரத்தினம் பாடியது சரி!" என்று சொன்னார். சுப்புரத்தினத்தையும் பாராட்டினார். அத்தலைவர் புதுவையில் இருக்கும் வரை, சுப்புரத்தினத்தின் செல்வாக்கு, கல்வித் துறையில் கொடிகட்டிப் பறந்தது.
இளமையிலிருந்தே சுப்புரத்தினத்துக்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். கெப்ளே என்பவர் புதுவை ஆளுங்கட்சித் தலைவர். அவரை எதிர்த்து, குட்டியா சபாபதிப்பிள்ளை என்பவர் போட்டியிட்டார். அவர் பெரிய வழக்கறிஞர். திருபுவனையில் அப்போது சுப்புரத்தினம் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவ்வட்டாரத்தில் அவருக்குச் செல்வாக்கு அதிகம். பிள்ளை வெற்றி பெறக் கடுமையாக உழைத்தார் சுப்புரத்தினம். பிள்ளை வெற்றியும் பெற்றார். தேர்தல் முடிந்து ஒரு திங்கள் ஆனதும் கெப்ளேயின் ஆட்கள் பாரதிதாசன் மீது பொய் வழக்குப் போட்டு ஒரு மாதம் மூன்று நாள் சிறையிலே தள்ளிவிட்டார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்ததும் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 29. அவர் மனைவி பெயர் பழனியம்மாள் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் என்பாரின் மகள்.
புதுச்சேரித் தேர்தல் காலங்களில் சுப்புரத்தினம் ஒரு சிங்கம். அவர் எழுதுகோலின் முழக்கத்தைக் கேட்டு அரசியல் நரிகள் ஊளையிட்டு