24
பாரதிதாசன்
பாரதியார் சாதிக் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பார். கனகலிங்கம் என்ற அரிசன இளைஞருக்குத் தாமே புரோகிதராக இருந்து உபநயனம் செய்வித்தார். எல்லாரும் காணும்படி பாரதிதாசனோடு இகலாமியர் கடையில் தேநீர் அருந்துவார். 'பாரதி உள்ளம்' என்ற தம்முடைய பாடலில், பாரதியார் உயர் பண்புகளைப் பாரதிதாசன் படம் பிடித்துக் காட்டுகிறார். சாதி ஒழிப்பதும், தமிழ்வளர்ப்பதுமே அவரது தலையாய கொள்கைகள் என்கிறார்.
சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்-மற்றப்
பாதி துலங்குவ தில்லை
சாதி களைந்திட்ட ஏரி நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே.நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!
என்றுரைப் பார்என்னிடத்தில்-அந்த
இன்ப உரைகள் என்காதில்
இன்றும் மறைந்திட வில்லை-நான்
இன்றும் இருப்பத னாலே!
பாரதிக்குப் பணத்தட்டுப்பாடு எப்போதும் உண்டு. ஓர் உயர்ந்த கவிஞனை வறுமை ஒன்றும் செய்து விடுவதில்லை. என்றாலும் சில நேரங்களில் உள்ளம் தளர்ந்து பராசக்தி என்னை ஏன் மேன்மேலும் சோதிக்கிறாய்? இன்னும் என்னைச் சோதித்தால் நான் நாத்திகன் ஆகிவிடுவேன்!" என்று பராசக்திக்கே எச்சரிக்கை விடுவதுண்டு.
பாரதியார் ஒரு சமயம், அதிகமான மனவருத்தத்தால் புதுவையை விட்டுவிட்டு, ஆங்கிலேயரின் இந்தியப் பகுதிக்குச் சென்று விடுவது என்ற முடிவோடு, புகைவண்டி நிலையத்துக்குச் சென்று விட்டாராம். யாராலும் அவரைத் தடுக்க முடியாது. செல்லம்மாளும் பாரதியை எதிர்த்துப் பேச முடியாது. பாரதியார் கோபங்கொண்டு எங்கோ போய்விட்டார் என்ற சேதி நண்பர்களிடையே பரவியது.