பாரதியும் தாசனும்
27
இளமைக் காலக் கவிதைகள் சற்றுக் கடினமான யாப்பில் அமைந்தவாறு பாரதிதாசன் எழுதியுள்ளார். இடைக் காலப் பிரபந்தங்களின் நடை அவற்றில் பின்பற்றப்பட்டுள்ளது. கருத்துச் சிறப்பைவிடக் கவிதைக் கட்டுமானச் சிறப்புக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
பாரதியாரின் வீட்டில் இருந்தபோது, அவர் எழுதும் கணக்கப் பிள்ளை மேசையினுள் வைக்கப்பட்டிருந்த கையெழுத்துப் படியொன்றைப் பார்க்கும் வாய்ப்பு பாரதிதாசனுக்கு எதிர்பாராமல் ஏற்பட்டது. அதைப் படித்துப் பார்த்தார். அது பாஞ்சாலி சபதத்தின் கையெழுத்துப்படி அதன் நடை படிக்கப் படிக்கப் பாரதிதாசனைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.
எளியநடை எளிய சந்தங்கள் படித்தவுடன் படிப்பவர் நெஞ்சில் உட்காரும்படி தெளிவான கருத்துக்கள், தெவிட்டாத கற்பனைச் சுவை. இதற்கு முன் பாரதிதாசன் இது போன்ற பாடலைப் பார்த்ததில்லை. அவர் படித்ததெல்லாம் சிலேடை, யமகம், திரிபு என்ற உதடு ஒட்டாத, பல்லுடைக்கும் பாடல்கள். பாஞ்சாலி சபதப் பாடல்கள் இளநீர் போல் இதமாக இதயத்தில் இறங்கின. பாரதிதாசனுக்கு ஒரு புதிய விழிப்பு: விசாலமான காற்றோட்டமான விடுதியில் நுழைவது போன்ற வியப்பு: சுகம்! பாரதிதாசன் உள்ளத்தில் அவரையும் அறியாதபடி ஒரு கவிதை இரசவாதம் நிகழ்வதை உணர்ந்தார். இதனைப்
'பாடலில் பழமுறை பழநடை யென்னும்
காடுமுழுவதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்தறியென்
பாடற்குப் புதுமுறை புதுநடை காட்டினார்'
என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதியார் எழுதிய எளிய இனிய கவிதைகளுக்குப் புதுவைப் புலவரிடையே பெரும் எதிர்ப்பு இருந்தது. பாரதிதாசனின் ஆசிரியரான பங்காருபத்தர் பாரதி பாடல்களைக் கடுமையாக விமர்சிக்கும் இயல்புடையவர். ' "சுட்டுக்கு முன் வல்லெழுத்து வந்தால் ஒற்று மிகும் என்ற எளிய இலக்கணம் கூடப் புரியாமல் 'அங்கு போனான்' என்று எழுதுகிறானே பாரதி, இவனையெல்லாம் கவிஞனென்று எவ்வாறு ஒத்துக்கொள்வது?" என்று கேட்பாராம்