3
தேசியக் கவி
கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழுறுகிறேன் அதைக் கேளே-நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே தூளே தூளே!
பாரதிதாசன் என்ற பெயரைக் கேட்டவுடன் அவர் ஒரு கருப்புச் சட்டைக்காரர், நாத்திகர், பெரியாரின் கொள்கைவாதி என்ற எண்ணம் தான் எல்லாருடைய உள்ளத்திலும் தோன்றும். இளமையில் அவர் ஒரு முருக பக்தர் என்பதோ, அவர் குடும்பம் சைவ சமயத்தின்பால் பற்றுக் கொண்டது என்பதோ, அவர் ஒரு தீவிர தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தார் என்பதோ தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது.
பாரதியாரின் தொடர்பு பாரதிதாசனை வெகுவாகப் பாதித்தது. பாரதியின் தேசியக் கருத்துக்களும், சாதிமறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய தீவிரமான கொள்கைகளும் இவரைப் பெரிதும் ஆட்கொண்டன. பாரதி விட்டுச் சென்ற பணிகளைப் பாரதிதாசன் தொடர்ந்து செய்தார் என்பதுதான் உண்மை. இச்செய்திகள் யாவும் இவர் எழுதியுள்ள நூல்கள் மூலமாகவும், இவரைப் பற்றிப் பிறர் எழுதியுள்ள நூல்கள் மூலமாகவும், புதுவையிலிருந்து வெளியான தேச சேவகன், பூரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், போன்ற ஏடுகள் மூலமாகவும் அறியக் கிடக்கின்றன.
இளமையில், மாடசாமி போன்ற தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த பாரதிதாசன், காந்தியவாதியாக மாறி 1920 ஆம் ஆண்டு சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பாரதத்தை தெய்வீகத் திருநாடு' என்றும், 'நாலுவேதத்தின் தாய்', 'ஆறு சமயத்தின் தாய்' என்றும் போற்றுகின்றார்.