தமிழ் மறவர்
61
வியப்பிற்குரியவை. அறத்தைச் செய்து, பொருளைத் தேடி, இன்பத்தை நுகர்ந்து வாழ்வதே பேரின்பமாக அவர்கள் கருதினர். காதலைப் பொருத்தவரையில் களவியல், கற்பியல் என்று வாழ்ந்த வாழ்க்கை உன்னத இலக்கியங்களுக்கு வழிகோலியது.
சிற்றின்பம், பேரின்பம் பற்றி இலக்கியத்தில் பலரும் பல விதமாகக் கூறியுள்ளனர். பாரதிதாசனும் 'எதிர்பாராத முத்தம்' என்ற தம் சிறு காப்பியத்தில், தலைவி பூங்கோதை வாயிலாகப் பேரின்பத்தைப் பற்றி ஒரு கருத்தை வெளியிடுகிறார்.
காப்பியத் தலைவியான பூங்கோதை தன் காதலனான பொன்முடியைக் களவில் சந்தித்தபோது
அத்தான் என்ஆவி உங்கள்
அடைக்கலம்! நீர்மறந்தால்
செத்தேன், இஃதுண்மை! இந்தச்
செகத்தினில் உம்மை அல்லால்
சத்தான பொருளைக் காணேன்!
சாத்திரம் கூறுகின்ற
பத்தான திசை பரந்த
பரம்பொருள் உயர்வென் கின்றார்.
அப்பொருள் உயிர்க்கு லத்தின்
பேரின்பம் ஆவ தென்று
செப்புவார் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின்றோமே!
அப்பெரியோர்களெல்லாம்
வெட்கமாய் இருக்கு தத்தான்
கைப்பிடித் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும்!
என்று வெட்கத்தோடு கூறுகிறாள். பெண்ணின்பத்தைச் சுவைத்த யாரும் வேறு எதையும் பேரின்பமென்று கூறமாட்டார்கள் என்பது பூங்கோதை கருத்து.
இவ்வாறு பெண்ணின்பத்தைப் புகழ்ந்து பாராட்டிய பாரதி தாசனுக்கு அந்த இன்பமும் தெவிட்டிப் போய் விடுகிறது. எப்போது?