உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

திரைப்பட நாடக எழுத்தாளர்

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?

புதுவைக் 'கெப்ளே' நாடக அரங்கில் கலைவாணர் என்.எஸ். கிருட்டிணனின் 'கிந்தனார் காலட்சேபம்' நடந்தது. காலட்சேபம் முடிந்ததும் அரங்கின் உள்ளே சென்று கலைவாணரைப் பார்த்தார் பாரதிதாசன். கவிஞரைக் கண்டதும் அவர் கையைப் பிடித்துக் கொண்டு "ஐயா! தங்கள் ஆசி பெறவே புதுவைக்கு வந்தேன்" என்றார் கலைவாணர்.

"சம்பாதிக்க வரவில்லையா?" என்றார் கவிஞர்.

"உங்கள் ஆசியைச் சம்பாதிக்கவே வந்தேன். ஐயா! புதுச்சேரி ஒரு குளம். அதில் தாங்கள் ஓர் தாமரைப்பூ இவ்வூர்க்காரர் உங்கள் பெருமையை உணராத தவளைகள்; ஆனால் நாங்கள் வண்டுகள். எங்கேயோ இருந்து இங்கு வந்து உங்கள் ஆசியாகிய தேனைப் பெற்றுச் செல்கிறோம்" என்றார் கலைவாணர்.

"பரவாயில்லையே! இவன் கூடக் கவி பாடுவான் போலிருக்கிறதே" என்றார் கவிஞர்.

பாரதிதாசனுக்கு இளமையிலிருந்தே நாடகத்தின்பாலும், நடிகர்கள்பாலும் அன்பும் ஈடுபாடும் அதிகம். தம் குழந்தைகளான சரசுவதியும், கோபதியும் நடிக்க வீரத்தாய் என்ற கவிதை நாடகத்தை எழுதினார். தம் நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நடிப்பதற்குச் சிந்தாமணி என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், சேக்ஸ்பியரின் 'வெனிசு நகர வாணிகன்' என்ற நாடகத்தையும் தமிழ்ப்படுத்திக் கொடுத்தார்.