பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பாரதிதாசன்


இசைப்பாடல்” என அழைப்பர். 'உய்யாலு' என்பது தெலுங்கிலும், கன்னடத்திலும் முறையே தூளியையும், ஊஞ்சலையும் குறிக்கிறது. “உய்யாலை உறுமாலை” என வரும் தமிழ்த் தூளி பாட்டு நினைவு கூரத்தக்கது. தொட்டிலை மலையாள மக்கள் தொட்டில் என்றே மாற்றாமல் அழைக்கவும் தெலுங்கு மக்கள் மட்டும் “தொட்ல” என அழைக்கின்றனர். கன்னடத்திலும் இச்சொல் வழக்கு உளது.

தாலட்டிற்குரிய பண் ‘நீலாம்பரி' என்பர். சொல்லோட்டத்தோடு அமையும் ஒலிமுறையே தாலாட்டின் உயிராகும். தாய், எங்ஙனம் பாடினாலும், இசையறிவு சிறிதுமின்றிப் பாடினாலும் ஒலியமைதியோடு ஒழுங்காகப் பாடுவதால், அது குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்ற இசையாகிவிடுகிறது, தாயின் பெண்மை கனிந்த குரலும் இதற்குத் துணையாக வேண்டும். ஒலியமைதி கெட்டாலும், குரலினிமை பிழைத்தாலும் தாலாட்டின் பயன் மாறிவிடும்!

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்கும் தாலாட்டுக்கள் தமிழ் நடையையும் பண்பையுமே வெளிப்படுத்துகின்றன. தமிழின் குழந்தைகளில் ஒன்றாகிய மலையாளத்தில், தமிழைப் போலவே தாலாட்டுப் பெரு வழக்காக இருக்கிறது. சந்தம் இசையமைப்போடு சொற்கள் பொருட்செறிவெல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. அகநானூற்றையும் அழகுபடுத்தும் சங்க இலக்கியச் சொற்களையெல்லாம் காணவேண்டுமென்றால் மலையாளத்திற்கும், தெலுங்கு, கன்னடம், குடகு, கொங்கணி எனத் தமிழ்க் குழந்தைகள்