பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

19


ஆழ்வார்கள். கண்ணனைக் குழந்தையாகக் கருதிப் பாடிய காரணத்தால் தாலாட்ட வேண்டி இன்றியமையாமை இவர்களுக்கு ஏற்பட்டது போலும். எனவே தாலாட்டு இலக்கியத்தில் ஏறிய காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டாகும்.

அதன் பிறகு ‘பிள்ளைத் தமிழ்’ என்ற சிறு நூல் வகை, தமிழ் இலக்கியத்தில் பெருகிற்று. பிள்ளைத் தமிழுக்குக் கூறப்படும்பத்துப் பருவங்களில் தாலப்பருவமும் ஒன்று. அதனால் ஒவ்வொரு பிள்ளைத் தமிழிலும் தாலாட்டு இடம் பெறுவதாயிற்று. இக்காலத் தமிழ்க் கவிஞர்கள் பலர், தாய்மை தரும் தாலாட்டின் இசை, நடை, மொழிகளையே அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாடு, மொழி, இன வளர்ச்சியையும் வரலாற்றையும் கருத்தாகக் கொண்டு தனிக் கவிதைகள் பல புனைந்து வருகின்றனர். இதுவே தாலாட்டின் இலக்கிய வளர்ச்சியாகும்.

-தமிழண்ணல்


ஆழ்வார் பாடிய தாலாட்டு

இறைவன் மனித உயிர்களைப் படைத்தபோது அவற்றை ஆண், பெண் என இருபாலாகப் படைத்தான். உடல்வன்மை, மனவுறுதி, உழைப்பு ஆகிய வலிமைக்கான இயல்புகளை ஆடவனிடம் அமைத்தான். இரக்கம், பராமரிப்புத் திறன், இனிமை போன்ற மெல்லியல்புகளைப் பெண்ணிடம் அமைத்தான். இந்த இயற்கை அமைப்பின் பயனாக, மக்கள் வாழ்க்கையிலே குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆடவனுக்கு ஏற்பட்டது. அக் குடும்பத்தைப் பேணுகின்ற தனி உரிமை பெண்ணுக்கே சொந்தமாகிவிட்டது.