பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

25


அடிசில் முதலிய நைவேத்தியங்கள், அழகான மணம்மிக்க மலர்கள், மலர்களாலான அலங்காரங்கள்-இவைகளா? இவைகளைச் செய்வார் செய்க; ஆனால் எல்லோருக்கும் இவை வேண்டுவன அல்ல. உண்மையான அன்பு-பக்தி- இது மட்டும் ஒருவன் - அகத்திலே இருக்குமானால் இவையொன்றும் வேண்டாம். வெறும்புல் இருந்தால் போதும்; பச்சை இலை இருந்தாலும் போதும். அதுகொண்டு இறைவனை வழிபடலாம். 'யாவர்க்குமாம் ஒருபச்சிலை' என்கிறார் அடியவர். அப்பச்சிலைக்கு அவன் வயப்பட்டுவிடுவான்.

கண்ணன் துலாபாரம் என்ற சரித்திரம் இவ்வுண்மையை உணர்த்துகிறது. சத்தியபாமையின் அளவற்ற பொன்னுக்கும் மாணிக்கம் ஆபரணத்துக்கும் கட்டுப்படாத கிருஷ்ணன், ருக்குமணியின் அன்புக்கு அடையாளமான ஒரு சிறு துளசி இலைக்குக் கட்டுப்பட்டுவிட்டான். எனவே, அவ்வளவு அன்பையும் உட்கொண்டுள்ள அத் துளசி இதழின் அருமைதான் என்ன?

ஆழ்வாருடைய குழவிக் கண்ணனுக்கு, இத் துளசி இதழ்களால் ஒரு மாலை கட்டித் திருமகள் அனுப்புகிறாள். இதன் அருமையை யார்தான் சொல்லமுடியும்? (துளசியைத் தமிழிலே திருத்துழாய் என்று அருமை பாராட்டிச்சொல்லுகிறோம்.) காட்டிலே தழைத்த துழாயனபடியால், அருமையான மணமெல்லாம் அதனிடத்திலே பொருந்தியிருக்கிறது. மேலும், அந்த மாலையிலே, திருமகளுடைய கை வேலையின் திறனெல்லாம் அமைந்திருக்கிறது.