பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பாரதிதாசன்


கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்;
கோனே! அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ.

காத்தற் கடவுளாகிய திருமாலுக்கு உலகத்திலுள்ள எல்லாச் செல்வமும் உரியது; அவனே செல்வத்துக்கு நாயகன். திருமகளுக்கு அவன் நாயகன் என்பது போலவே, உழவுச் செல்வம் அனைத்துக்கும் இடமாயிருக்கிற பூமியும் அவனுக்கே தேவியாகிறாள் என்று நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள். திருமகள் கண்ணனுக்குத் தன் கையுறையை அனுப்பியதும், பூதேவி தானும் சில கையுறைகளை அனுப்புகிறாள். கச்சு, சுரிகை, பொன்வளை சுட்டி, தாளில் அணிவதற்காகப் பொற்பூக்கள் என்றெல்லாம் பலபொருள்களை அச்சுதனுக்கென்றே அவள் தருகிறாள்:

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுதனுக் கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய்! தாலேலோ
நாராயணா! அழேல் தாலேலோ.

திருமகளையும் புவிமகளையும் இவ்வாறு எண்ணியும் அழைத்தும் தாலாட்டிய ஆழ்வாருடைய கலையுள்ளத்திலே, இந்தச் சக்திகளுக்கெல்லாம் மூலசக்தியாகிய அன்னை பராசக்திக்கு இடமில்லாமற்போகவில்லை. கற்பனையிலே அழுகிற இளங்கண்ணன், அழுகையை நிறுத்திச் சிறிது பொழுது உறங்கவேண்டும். உறங்கி விழித்தெழுந்த வுடனே அவனை நீராட்ட வேண்டுமென்ற கருத்தோடு