பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
பாரதிதாசன்
 

இவை அனேக வகை. அவற்றுள் தாலாட்டும் ஒன்று. தெரிந்த வரையில் இவ்வகையான சில முக்கியமான தாலாட்டுப்பாடல்களின் மாதிரியைப் பின்னே காணலாம்.

சுந்தர் தாலாட்டு

(19ஆம் நூற்றாண்டு. 32 கண்ணிகள். இனிமையான சொல்லமைப்பு, ஆசிரியர் பெயர் அறியக் கூடவில்லை .)

குமரா உனைத்தொழுவேன் குன்றெறிந்த வேல்முருகா
அமராபதிகாக்கும் ஆறிரண்டு தோளானோ!

கட்டு வடமசையக் காலசைய வேலசைய
முத்து வடமசைய முன்வந்து நின்றனோ!

குயில்கூவ மயிலாடக் கோவில் திருச் சங்கூத
அழகான மயிலேறி உலகாள வந்தானோ!

வருண மயிலேறி வள்ளியம்மை தன்னுடனே
அருணகிரிக் கோபுரத்தை அஞ்சலாய் நின்றானோ!

நினைத்த இடந்தோறும் நீலமயி லேறி வந்து
மனத்துக் கவலையெலாம் மாற்றும் பெருமாளோ!

ஸ்ரீராமர் தாலாட்டு

(31 கண்ணிகள், ராமசரிதத்தை வரலாறாகத் தாலாட்டில் உரைப்பது, 19ஆம் நூற்றாண்டு. இதில் பல பாடங்கள் இருப்பதால், வழக்கில் அதிகம் இருந்ததென்று யூகிக்கலாம்)

தெள்ளுதமிழ் கொண்டாடச் சீரான தசரதற்குப்
பிள்ளைவிடாய் தீர்த்த பெருமானைச் சொன்னாரோ.