பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாரதிதாசன்


வேண்டும், இந்நோக்கத்துடன் தாலாட்டைப் படிக்கும் போது நமக்கு உறக்கமன்று, விழிப்புணர்ச்சி உண்டாகிறது!

இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையைவிட, நாடு இனம் மொழியிற் படியும் பற்றுதலை விட ஏன்-உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது, வலிமை மிக்கது, உணர்ச்சி மயமானது! இத்தகையை தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு.

நாடகக் கொட்டகைகளிலோ, பொதுக் கூட்டத்திலோ, அடுத்த வீட்லோ குழந்தை அழக்கேட்டு விட்டால் நாம் சகிப்பதில்லை . 'அடடா' என்றும் 'இச்சிச்சு' என்றும், 'தொல்லை பொறுக்க முடியவில்லையே' என்றும் கூறுவதால் நமது பொறுமையின்மை பொங்கி வெளிப்படுகிறது. அதே நேரத்தில் தன் பிள்ளை எழுந்து அழுதுவிட்டால் கேட்ட அளவில் கன்றை நினைந்து கதறியோடும் கறவைப் பசுப்போல் அலறி ஓடுகிறாள் தாய். அழுகைச் சிணுங்கலால் அவல உணர்ச்சிகளின் எல்லை நரம்புகளையே மீட்டி விடுகிறது குழந்தை. குழந்தையின் ஒவ்வொரு பெருமூச்சும், பொருமலும், தேம்பலும் ஒவ்வொரு சோக இசையாக, கவிதையாக, நாடகமாக மாறிவிடுகின்றன தாய்மை உலகில்! இந்த நிலையிலேதான் மலைமீதிருந்து பாயும் வெள்ளருவி போல, மணல்வெளியில் மதிவார்க்கும் நிலவொளி போல, தேன் சொட்டும் இறால்போல, இனிமைதரும் தென்றல்போல, உள்ளங்கரும் இசை தாயுள்ளத்தின் ஊற்றாகிறது;